புதுடெல்லி: மத்திய அரசின் பொதுநிறுவனங்களை விற்பனை செய்யும் பாஜக, 12 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை என உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் ஆறாம்கட்டப் பிரச்சாரத்தில் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச ஆறாம்கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் மார்ச் 3 இல் துவங்கி நடைபெற உள்ளது. குஷிநகரில் நடந்த இதற்கானப் பிரச்சாரத்தில் அம்மாநில காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: “கடந்த ஐந்து வருடங்களாக உத்தர பிரதேச இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கவில்லை. இதற்கு மாநிலத்தில் நிரப்பப்படாமல் உள்ள 12 லட்சம் அரசு பணியிடங்களும் காரணம். தமது உரைகளில் பிரதமர் மோடியும், முதல்வர் யோகியும் பெரிய, பெரிய வாக்குறுதிகளை அளித்தும் பணியிடங்களை நிரப்பவில்லை.
கடந்த தேர்தலில் 70 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளுக்கு உறுதி அளித்தனர். ஆனால், வெறும் நான்கு லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. விலைவாசி மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் சிறு குறு நடுத்தர தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பெறுநிறுவனங்களை காக்கும் பணியில் ஈடுபடாமல் மத்திய பாஜக அரசு அவற்றை விற்பதில் ஆர்வம் காட்டுகிறது. இதன்மூலம், அவர்களது பெருநிறுவன அதிபர்களுக்கும், நண்பர்களுக்கும் பலன் பெற்றுத்தருகின்றனர். பதிலாக இரண்டு பெரிய பெருநிறுவன அதிபர்கள் பாஜகவிற்கு அதிகமான நன்கொடைகள் அளிக்கவும் செய்கின்றனர்.
இதுபோன்றவர்களுக்கு நாட்டின் விமானநிலையங்களையும், துறைமுகங்களையும் விற்பனை செய்துள்ளது பாஜக அரசு. இதனால், உத்தர பிரதேச இளைஞர்கள் வேலை தேடி தங்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். தங்களை தட்டிக் கேட்க எவரும் இல்லை என்ற எண்ணம் தான் இந்த போக்கிற்கு காரணம். தேர்தல் சமயங்களில் இந்து-முஸ்லீம் உள்ளிட்ட சாதி-மத துவேஷப் பேச்சுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். இதை உணராமல் கண்மூடித்தனமாக வாக்குகளை பாஜகவிற்கு அளிக்கக் கூடாது. இனியாவது இப்பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உபியின் கிழக்குப் பகுதியிலுள்ள குஷிநகரின் தொகுதியில் அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள அஜய் குமார் லாலு போட்டியிடுகிறார். முன்னதாக பிரியங்கா, பலியா மற்றும் தியோரியா மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்திருந்தார். உபியில் ஏழாம் ஒரே ஒரு கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7 இல் நடைபெற உள்ளது. இவை அனைத்தின் முடிவுகளும் மார்ச் 10 இல் வெளியாக உள்ளன.