புதுடெல்லி: பாலியல் தொழிலாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கொரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வாக்காளர் அட்டை உட்பட அனைத்து ஆவணங்களும் வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்படிருந்தது.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களையும் உடனடியாக அடையாளம் காண வேண்டும். இதைத்தவிர அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் பணியும் தொடர்ந்து நடைபெற வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.