நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சென்ற பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவிகிதம் அதிகமாகும். அதேநேரம், சென்ற ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலான ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 986 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி வசூலில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு 4ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 சதவிகிதம் அதிகரித்து 7 ஆயிரத்து 393 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் போன்றவற்றை அமல்படுத்தியதே ஜிஎஸ்டி வசூல் குறைந்ததற்கு காரணம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ”நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்தான் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்” – மத்திய அமைச்சர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM