ஜெனீவா,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்பு அவசர 11-வது கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷியாவின் தாக்குதல்களை கண்டித்து பேசினார். அவர் பேசியதாவது,
“போதும் – போதும்; போர் நடவடிக்கை அதிகமானால் அப்பாவி பொதுமக்கள் தான் பலியாகின்றனர். ராணுவ வீரர்கள் திரும்பவும் தங்கள் இடங்களுக்கு திருப்பி செல்ல வேண்டும். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளது. சமாதானம் மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வு ஆகும்.
உக்ரைனுக்கு ஐ.நா.சபை தொடர்ந்து உதவி செய்யும், அவர்களை கைவிடாது, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று உக்ரைன் அதிபருக்கு நான் உறுதியளித்துள்ளேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், அனைத்து தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்; பேச்சுவர்ர்த்தையை தொடங்கலாம். தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஐ.நா. சபையின் ஒட்டுமொத்த கருத்தாக கூட்டாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்திருந்த ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவ் பங்கேற்கவில்லை. எனினும் ரஷியாவின் சார்பில் பிற பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் உக்ரைன் சார்பில் அந்நாட்டு பிரதிநிதி தொடர்ந்து பங்கேற்று பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.