கார்கிவ்: போர் குற்றங்களில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டதா என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது உக்ரைன் – ரஷ்யா போரில் ரஷ்ய ராணுவத்தின் மனித உரிமை மீறல் மற்றும் போர் குற்றங்கள் குறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்ய ராணுவம் மிகப்பெரிய மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் கரிம் கான் ஐசிசி நீதிபதிகளிடம் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஒரு வார காலமாக உக்ரைன் ரஷ்ய போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யாவின் அத்துமீறலை எதிர்த்து பல்வேறு நாடுகள் ரஷ்யா உடனான தங்களது வர்த்தக தொடர்பை துண்டித்து வருகின்றன.
மேலும் தங்கள் நாட்டு வான் எல்லையில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளன. உலக நாடுகள் பல ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார கட்டுப்பாடுகள் விதித்து தங்களது எதிர்ப்பை காட்டி வரும் சூழலில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. உக்ரைன் உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரான்ஸ் பிரதமர் மேக்ரானிடம் தொலைபேசி வாயிலாக இது குறித்து விவாதித்தார். ரஷ்ய சரக்கு கப்பல்களை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ள நிலையில் சூயஸ் கால்வாய் உள்ளிட்ட உலகின் முக்கிய கால்வாய் வழியாக அவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐநா., பொது அசெம்பிளி கூட்டத்திலும் ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. போரின்போது குடிமக்களை தாக்கக் கூடாது என்கிற சர்வதேச விதியை ரஷ்ய அரசு மீறி உள்ளதாகவும் கார்கிவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 5 லட்சம் உக்ரைன் குடிமக்கள் அண்டை நாடான போலாந்துக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 14 குழந்தைகள் உட்பட 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக அதிக மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவில் எதிர்காலத்தில் குடிமக்கள் கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே ரஷ்ய நாட்டில் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் குடிமக்கள் அவதியுற்று வருவது குறிப்பிடத்தக்கது. இருநாட்டு தலைவர்களின் போரால் ரஷ்ய குடிமக்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதியுறுவது வேதனைக்குரியது விஷயம்.
Advertisement