திருப்பதி: பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் தற்போது பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகவும், ராகு – கேது பரிகார தலமாகவும் காளஹஸ்தி சிவன் கோயில் விளங்குகிறது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பக்தனுக்கு முதல் மரியாதை அளிக்கும் வகையில், இந்த திருத்தலத்தில்தான் சிவன் கோயிலுக்கு அருகே மலை மீது உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில் கடந்த 24-ம் தேதி கொடியேற்றம் நடந்தேறியது. இதனை தொடர்ந்து கடந்த 25-ம் தேதி சிவன் கோயில் முன் கொடியேற்றம் நடந்தது.
இன்று மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனால் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோர ணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.
இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று காலை, ஆந்திர அரசு சார்பில், பஞ்சாயத்து துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று காணிக்கையாக வழங்கினார். இன்று காளஹஸ்தியில் நந்தி வாகனத்தில் உற்சவர்கள் வீதி உலா நடைபெறும். நள்ளிரவு லிங்கோத்பவ தரிசனம் நடத்தப்படும். மார்ச் 2-ம் தேதி (நாளை) காலை தேர்த்திருவிழாவும், இரவு தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.
3-ம் தேதி இரவு சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 4-ம் தேதிநடராஜர் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 5-ம் தேதி சுவாமியின் கிரிவலமும், 6-ம் தேதி திரிசூல ஸ்நான நிகழ்ச்சியும் நடைபெறும்.அன்றிரவே கொடியிறக்க நிகழ்ச்சியுடன் மகா சிவராத்திரி பிரம்மோற்சவமும் நிறைவடைகிறது. 7-ம் தேதி பூப்பல்லக்கு சேவை நடத்தப்படும்.