புதுடில்லி: உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படையும் உதவி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஏர் இந்தியா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது வரை, இதற்காக ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் 8 விமானங்களில் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மீட்பு பணியில் இந்திய விமானப்படையும் உதவி செய்ய வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நமது விமானப்படையை திறன்களை பயன்படுத்தி, குறுகிய காலத்தில் அதிகளவிலான மக்களை மீட்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் மனிதாபிமான உதவிகளை திறமையாக வழங்க முடியும் என பிரதமர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மீட்பு பணிக்கு ஏராளமான சி-17 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் 8 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி உள்ளதாக மத்திய அரசு கணித்துள்ளது. கடந்த மாதம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 8 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். உக்ரைன் அண்டை நாடுகளான ருமேனியா, ஸ்லோவேகியா நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
Advertisement