மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளவின் மகன் ஜைன் நாதெள்ள மரணம் அடைந்தார். அவருக்கு வயது 26.
சிரிபல் பால்சி என்னும் (மூளைச் சேதம், கை கால் முடக்கம்) நோயால் பாதிக்கப்பட்ட ஜைன் நேற்று உயிரிழந்தார்.இந்தத் துக்கச் செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தனது ஊழியர்களிடம் பகிர்ந்துள்ளது.
அதில், ”சத்யா நாதெள்ள குடும்பத்தோடு துக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். அதேசமயம் நாதெள்ள குடும்பம் தங்கள் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை செலவிட அனுமதியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகன் ஜையின் நாதெள்ள பிறந்த நாளின்போது சத்யா நாதெள்ள எழுதிய பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
2017-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தப் பதிவில், சத்யா நாதெள்ள, “அனுவின் 36-வது கர்ப்ப வாரத்தில் அவரது வயிற்றில் இருந்த எங்களது குழந்தை அசையவில்லை என்பதை அவர் உணர்ந்தார். இதனைத் தொடர்ந்து நாங்கள் பெல்லூவில் உள்ள உள்ளூர் மருத்துவமனையின் அவசர அறைக்குச் சென்றோம். இது ஒரு வழக்கமான சோதனையாக இருக்கும் என்று அப்போது நாங்கள் நினைத்தோம்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக எங்களுக்கு கவலை அதிகமாகவே இருந்தது. அனுவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆகஸ்ட் 13-ஆம் தேதி 1996 ஆம் ஆண்டு ஜைன் பிறந்தான். அவன் பிறந்தபோது அவன் அழவில்லை. ஜைன் சிகிச்சைக்காக சியாட்டில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அன்று அனுவுடன் எனது இரவை கழித்தேன். மறுநாள் காலையில் உடனடியாக ஜைனைப் பார்க்க நாங்கள் சென்றோம். எங்கள் வாழ்க்கை மாறப் போகிறது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.
இனி வரும் ஆண்டுகளில் சக்கர நாற்காலியுடன் ஜைன் எவ்வாறு எங்களை சார்ந்திருக்கப் போகிறான் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். நான் சிதைந்து போனேன்” என்று பதிவிட்டிருந்தார்.
ஜைனின் மரணத்திற்கு அவர் சிகிச்சை பெற்று வந்த சியாட்டில் மருத்துவமனை ”ஜைன் இசையில் அவரது ரசனைக்காகவும், அவரது பிரகாசமான புன்னகைக்காகவும், அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் அவர் கொண்டு வந்த மகத்தான மகிழ்ச்சிக்காகவும் நினைவுகூரப்படுவார்” என்று இரங்கல் தெரிவித்துள்ளது.