கீவ் நகரில் உள்ள கட்டடங்களின் மொட்டை மாடியில் அடையாளங்களை போட்டு அதை குறி வைத்து ரஷ்யப் படைகள் தாக்குவதாக உக்ரைன் அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
தங்களது கட்டடங்களின் மாடியில் எக்ஸ் மார்க் போடப்பட்டிருந்தால் உடனடியாக அதை அழிக்குமாறும் மக்களை அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுபோன்ற குறியீடுகள் போடப்பட்டுள்ள கட்டடங்களை குறி வைத்து ரஷ்யப் படையினர் குண்டு வீசித் தாக்குவதாகவும் உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது.
X குறியீடு மட்டுமல்லாமல், வில் அம்பு குறியீட்டையும் சில இடங்களில் பார்க்க முடிகிறது. இந்தக் குறியீடுகள் இருந்தால் அந்தக் கட்டடங்களைத் தாக்கலாம் என்று ரஷ்ய படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதுதவிர மேலும் சில ரகசிய சமிக்ஞைகளையும் ரஷ்யப் படையினர் கடைப்பிடிக்கிறார்களாம்.
இதுதொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தங்களது வீடு, அல்லது கட்டடத்தின் மேல் மாடியில் ஏதாவது குறியீடு இருந்தால் அதை மறைக்குமாறும் மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பான எச்சரிக்கையை ரிவைன் நகர மேயர் அலெக்சாண்டர் டிரெட்யாக் தனது முகநூலில் போட்டுள்ளார்.
நாயை விட்டு.. மெர்க்கலை “மிரட்டிய” புடின்.. பயங்கர சேட்டைக்கார ஆளு!
தங்களது வீடுகளையும், கட்டடங்களையும் தொடர்ந்து கண்காணிக்குமாறும் மேயர் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தங்களது கட்டடங்கள் மீது ஏதாவது குறியீடு இருக்கிறதா என்று பார்த்து வருகின்றனர். குறியீடுகள் இருந்தால் அதை அழிக்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர்.
தங்களது நகரம் ரஷ்யர்களின் பெரும் தாக்குதலில் சிக்கும் நேரம் நெருங்கி விட்டதாக பலரும் கருதுகின்றனர். காரணம், கீவ் நகருக்கு அருகே கிட்டத்தட்ட 64 கிலோமீட்டர் தொலைவுக்கு ரஷ்யப் படையினர் குவிந்து நிற்கின்றனர். அவர்கள் கீவ் நகருக்குள் புகுந்து தாக்க ஆரம்பித்தால் நிச்சயம் நகரம் தப்ப வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இதனால் கீவ் நகரைக் காக்க உக்ரைன் ராணுவம் அனைத்து வகையிலும் ஆயத்தமாகி வருகிறது.