அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்தநரேஷ் என்பவரை தாக்கி, சட்டையை கழற்ற வைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவிவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து,ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
அன்று இரவு ஜார்ஜ் டவுன்குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமாரை மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன் தேர்தல் நாளில் விதிமுறைகளை மீறி சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக ஜெயக்குமார் மீதுமற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை ஜெயக்குமார் அபகரித்ததாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் மீது 6 பிரிவுகளில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஏற்கெனவே சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை இந்த வழக்கிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமாரை ஆலந்தூர் ஜேஎம்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை மாஜிஸ்திரேட் வைஷ்ணவி விசாரித்து, ஜெயக்குமாரை மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.