புதுடில்லி:’நாட்டில், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில், இம்மாதம் துவங்கி மே மாதம் வரை, கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம்:நாட்டில் கோடைக்காலம், மார்ச் மாதம் துவங்கி, ஜூன் மூன்றாவது வாரம் வரை நீடிக்கும். தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கோடைக்காலம் முடிவடைவது வழக்கம். இந்நிலையில் இம்மாதம் முதல், மே மாதம் வரை, ஜம்மு – காஷ்மீர், லடாக், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய பகுதிகளில், வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
பஞ்சாப், ஹரியானாவில் சில பகுதிகள், உத்தர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று குறைவாக இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த ஆண்டு பிப்ரவரியில் தான், குறைந்த அளவு மழை பெய்துள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement