ஸ்டாலின் புத்தக விழா: கூட்டாட்சி தத்துவத்தை முழங்கிய தலைவர்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில், கலந்துகொண்ட தேசியத் தலைவர்கள் ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் கூட்டாட்சித் தத்துவத்தை முழங்கினர்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வெளியிடப்பட்டது. புத்தக வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த நூல் வெளியீட்டு விழா, மாநில சுயாட்சி மீதான தாக்குதல்களின் பின்னணியில் மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்த திமுக, காங்கிரஸ், என்சி, ஆர்ஜேடி மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைவதற்கான அரசியல் தளமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டில் மக்களின் குரல்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றன. நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், திட்டமிட்டு ஒவ்வொன்றாக தாக்கப்படுகின்றன. ஆனால், பாஜகவைப் பற்றி நாம் மாயையிலும் இருக்கக் கூடாது. அவர்களை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது எங்களுக்குத் தெரியும். நாம் அவர்களுடன் போராடப் போகிறோம். அவர்களை தோற்கடிக்கப் போகிறோம்.” என்று கூறினார்.

மேலும், ராகுல் காந்தி கூறுகையில், அவர்கள் வரலாற்றை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்கள் நம் பாரம்பரியத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களால் அதைத் தோற்கடிக்க முடியாது என்று கூறினார்.

நூல் வெளியீட்டு விழாவில் ஏற்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய ஒன்றியம் பிளவுபடுத்தும் சக்திகளால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. அவர்களைத் தோற்கடித்து, இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்ததாக தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு பறித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

பஞ்சாபில், எந்த விவாதமும் இல்லாமல் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு பரந்த நிலம் வழங்கப்பட்டது. “அவர்கள் தமிழ்நாட்டிற்கும் அதையே செய்கிறார்கள். என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். மோடி தனது கருத்துக்களை தமிழக மக்கள் மீது திணிக்க முயற்சிப்பதாகவும், மாநிலத்தை அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மு.க. ஸ்டாலின் தனது உரையில், மேடையில் உள்ள தலைவர்களுக்கு மட்டுமல்ல, மதச்சார்பற்ற விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். “எங்கள் இந்திய யூனியன் பிளவுபடுத்தும் சக்திகளால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. அவர்களைத் தோற்கடித்து, இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார். மாநிலங்களின் உரிமைகள் ஒன்றன் பின் ஒன்றாக பறிக்கப்படுவதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளும் அதை புரிந்து கொண்டுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார். திமுகவின் அடிப்படைக் கொள்கையான ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ நாட்டின் முழக்கமாக மாறியுள்ளது. மாநிலங்கள் அதிகாரமற்றதாக மாறுவதைத் தடுக்கவும், அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, மத்திய அரசின் செயலால் சென்னை மட்டும் பாதிக்கபடவில்லை. ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு எச்சரிக்கையாக இருப்பதாக கூறினார். “ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது அங்கே மட்டும் முடிந்துவிடாது, நாளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இதை செய்ய விடாமல் தடுக்க என்ன வழி” என்று கூறினார்.

கூட்டாட்சித் தத்துவம் தாக்குதலுக்கு உள்ளான போதெல்லாம் நாட்டிலேயே முதல் குரல் கொடுத்தவர் மு.க. ஸ்டாலின் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார். “அவர்களுக்காகவும், நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். அப்போதுதான், இன்று நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகுப்புவாத சக்திகள், சர்வாதிகார சக்திகளுக்கு முடிவு கட்டி முற்போக்கு, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு வழி அமைப்பதை உறுதி செய்ய முடியும். இந்தியாவின் அனைத்து குடிமக்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும்” என்று பினராயி விஜயன் கூறினார்.

ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தேசியத் தலைவர்கள் ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் அனைவரும் ஒற்றைக் குரலாக கூட்டாட்சித் தத்துவம் பற்றி முழங்கியது கவனத்தைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.