கீவ்: உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் 6-வது நாளாக இன்றும் தாக்குதல் நடைபெறுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.
போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தெரிகிறது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.