வாஷிங்டன்:
ரஷியா-உக்ரைன் போருக்கு இடையே இன்று அமெரிக்கா பாராளுமன்றம் கூடியது. கூட்டத்தில் அதிபர் ஜோபைடன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரஷிய அதிபர் புதினையும் மிக கடுமையாக தாக்கி பேசினார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-
ரஷிய அதிபர் புதின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நியாயமில்லாதவை. அவரது செயல்பாடுகள் உலகை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ரஷியா நடத்தி வரும் போர் மிகவும் தவறானது.
புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். இதனால் உலகுக்கு மாபெரும் ஆபத்தும், அச்சுறுத்தலும் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மக்கள் பக்கம் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சண்டையில் அமெரிக்கா நேரடியாக ரஷியாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்காது. உக்ரைனுக்குள் சென்று ரஷிய படைகளை எதிர்த்து போராடும் திட்டம் எதுவுமில்லை. அதே சமயத்தில் நேட்டோ நாடுகளுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும்.
புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் நிச்சயம் ஜனநாயகம் வெற்றி பெறும்.
புதின் உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி ஏராளமான பீரங்கிகளை நிறுத்தலாம். கிவ் நகருக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் உக்ரைன் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது.
இந்த உலகம் சுதந்திரமாக இயங்குவதை முடக்க புதின் முயற்சி செய்கிறார். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்காது.
உக்ரைன் நாட்டுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும். அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு முயற்சியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேட்டோ நாடுகளின் ஒரு இஞ்ச் இடத்தை கூட யாராலும் அபகரிக்க முடியாது.
உக்ரைன் நாட்டு மக்கள் உண்மையான வீரத்துடன் போராடி வருகிறார்கள். புதின் அவர்களை வெல்லலாம். ஆனால் இதற்கு ரஷியா நீண்ட நாட்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.
ரஷியாவால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகில் அமைதியை ஏற்படுத்தவே இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் அமெரிக்கா உறுப்பினராக இருக்கிறது. நேட்டோ அமைப்பு தனது கடமைகளை செய்யும்.
இதன் காரணமாக உக்ரைன் மீண்டும் வலிமை பெறும். புதின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வலிமை உண்டாகும். அதே சமயத்தில் ரஷிய பொருளாதாரம் மிகப்பெரிய சீரழிவை சந்திக்கும்.
உக்ரைன் விடுதலை பெற நேட்டோ முழு அளவில் உதவி செய்யும். தொடர்ந்து உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். மனிதாபிமான அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ராணுவ அடிப்படையிலும் அனைத்து உதவிகளும் தொடர்ந்து செய்யப்படும்.
ரஷியா விமானங்கள் அமெரிக்க வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. ரஷியா இனியாவது தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரஷியாவின் நியாயமற்ற செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தவறுக்கு மேல் தவறு செய்வதால் புதின் தனிமைப்படுத்தப்படுகிறார்.
அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக ரஷியா நிச்சயம் பலவீனம் அடையும்.
அமெரிக்காவும், அதன் கூட்டு நாடுகளும் ரஷியா மீது சக்தி வாய்ந்த பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷியாவின் பண பரிமாற்றத்தை சர்வதேச அளவில் நாங்கள் முடக்கி உள்ளோம். ரஷியாவின் வங்கி நடவடிக்கைகள் விரைவில் முடங்கும்.
வாழ்நாள் முழுக்க நாம் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.
இவ்வாறு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசி னார்.
அவரது பேச்சுக்கு அமெரிக்கா பாராளுமன்ற இருசபை உறுப்பினர்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.