அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வீடுகள் அல்லது சென்டர்களில் தனியாக டியூஷன் எடுத்தால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் ராதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் இன்று (மார்ச் 01) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் போன்றவற்றை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆய்வுகள், தகவல்கள், புகார்கள், ஆதாரங்கள் போன்றவற்றைச் சேகரிக்க, பள்ளிக் கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்புக் குழுக்களை 4 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று முதன்மை செயலாளர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியில் இருந்து கொண்டே, தொழிலில் ஈடுபடுவது, பிற இடங்களில் பகுதி நேர வேலை பார்ப்பது, டியூஷன் சென்டர்களை நடத்துவது, பயிற்சி மையங்களை நடத்துவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியது. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில் அல்லது செண்டர்களில் டியூஷன் எடுத்தால் அவர்கள் மீது துறை ரீதியான மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
பிற அரசு அலுவலர்களுடன் ஒப்பிடுகையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி நாள், வேலை நேரம் குறைவானது. டியூஷன் எடுப்பது ஆசிரியர்கள் மத்தியில் புற்றுநோய் போல் பரவிக் கிடக்கிறது. இது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பேராசையை அதிகரித்திருக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்தார்.
மேலும், மேற்கண்ட உத்தரவுகளை 4 வாரங்களில் செயல்படுத்த வேண்டும் என்றும், அதன் அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“