புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் இன்று மட்டும் எட்டு விமானங்களில் டெல்லி வந்து சேருகின்றனர். காலையில் வந்த இரண்டு விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உள்பட சுமார் 350 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.
ரஷ்யாவின் படையெடுப்பின் தீவிரத்தால் உக்ரைன் நிலைமை உக்கிரமைடைந்து வருகிறது. ரஷ்யாவின் மிக அருகில் அமைந்த உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள கீவ் தலைநகர் உள்ளது. இதனுள், இன்று ரஷ்யா தனது ராணுவத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனால், உக்ரைனில் பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகிவிட்டது. உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்டு வரும் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’ மீட்பு பணியில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதில், இன்று மட்டும் எட்டு விமானங்கள் டெல்லிக்கு வருகின்றன.
இவற்றில் காலை வரை வந்த இரண்டு விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உள்பட சுமார் 350 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். தமிழக மாணவர்கள் அனைவரையும் டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தின் அரசு அதிகாரிகள் வரவேற்று சென்னைக்கு அனுப்புகின்றனர். இன்று வந்த முதல் விமானத்தின் தமிழக மாணவர்கள் நண்பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் சென்னைக்கு கிளம்ப உள்ளனர். இவர்கள் அனைவரும், உக்ரைன் நாட்டின் பல்வேறு தேசிய அரசு மருத்துவப் பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்கள்.
உக்ரைனின் கார்கிவில் நேற்று கர்நாடகா மாணவர் நவீன் (21), ரஷ்யத் தாக்குதலால் பலியானார். இதையடுத்து, கார்கீவிலும், தலைநகர் கீவிலும் உள்ள அனைத்து இந்தியர்களையும் முழுமையாக திரும்ப அழைக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. உக்ரைனில் பயிலும் சுமார் 20,000 இந்திய மாணவர்களில் தமிழர்கள் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. எனினும், இவர்கள் அனைவரின் சரியான புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை. இன்று காலை வந்த இரண்டு விமானங்களுக்கு முன்பாக நேற்று நள்ளிரவும் ஒரு விமானம் வந்திருந்தது. இதில், மூன்று தமிழக மாணவர்கள் டெல்லிக்கு பத்திரமாகத் திரும்பினர்.
இந்த மூவரையும் இன்று விடியற்காலை டெல்லியிலிருந்து கிளம்பிய விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை வந்த இரண்டாவது விமானத்தில் வெறும் இரண்டு பேர் இருந்தனர். இவர்கள் இருவருமே கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு நேரடியாக செல்லும் விமானத்தில் அனுப்ப வைக்கப்பட உள்ளனர். இதுவரை மொத்தம் 114 தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து திரும்பியுள்ளனர். மேலும், ஆறு விமானங்கள் உக்ரைனின் எல்லைகளில் இருந்து நேற்று கிளம்பிவிட்டன. இவை அனைத்தும் இன்று டெல்லிக்கு வந்து சேரவுள்ளனர். இதில் தமிழர்களை வரவேற்று பயணங்களை தங்கள் வீடுகள் வரை நீட்டிக்க உதவ தமிழ்நாடு அரசு இல்ல அதிகாரிகள் விமானநிலையத்தில் இரவு பகலாகக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.