நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து தேர்தலை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்கு பிரகு, நாகர்கோயிலில் மட்டும் அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி அமைகிறது. இதற்கு அதிமுக தலைமை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தேர்தல்களை சந்தித்து வந்தது. ஆனால், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. பாஜக மாகராட்சிகளில் 22 இடங்களையும் நகராட்சிகளில் 56 இடங்களையும் பேரூராட்சிகளில் பேரூராட்சிகளில் 230 இடங்களையும் வென்றுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் மாநகராட்சியில் 11 இடங்களையும் நகராட்சிகளில் 21 இடங்களையும் பேரூராட்சிகளில் 168 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
நாகர்கோயில் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் பாஜக மட்டும் தனித்து 21 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதால் பாஜகவினர் நாகர்கோயில் மாநகராட்சி மேயர் பதவிக்கு முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில், ஆளும் திமுக கூட்டணி நாகர்கோயிலில் மொத்தம் 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 11 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணி நாகர்கோயில் மாநகராட்சியில் மேயர் பதவியைப் பிடிப்பதற்கு தேவையான கவுன்சிலர்களைவிட அதிகமாக பெற்றிருந்தாலும் பாஜக நாகர்கோயில் மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் களம் இறங்கியுள்ளது. அதற்காக, அதிமுக கவுன்சிலர்களின் ஆதரவை நாடி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், அதிமுக, பாஜக இடையே உடன்பாடு இல்லை என்றாலும், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட அதிமுக – பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் சி.தர்மராஜ் ஊடகங்களிடம் கூறுகையில், “மாநில தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தேர்தலில் போட்டியிடுவோம். கவுன்சிலர் மீனாதேவ்தான் எங்களின் மேயர் வேட்பாளர். மாவட்டத்தில் மொத்தமுள்ள 51 பேரூராட்சிகளில் 47ல் பாஜகவுக்கு பிரதிநிதிகள் கிடைத்துள்ளனர். அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் பல டவுன் பஞ்சாயத்துகளை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. பத்மநாபபுரம் நகராட்சியையும் கைப்பற்ற எங்கள் கட்சி போட்டியிடும்.” என்று கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் மாநகராட்சியில் மேயர் பதவி, நகராட்சி சேர்மன், மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளைக் கைப்பற்ற முயலும் பாஜகவுக்கு அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். அதே நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்துகளை கைப்பற்ற பா.ஜ.,வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்று அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டாலும், தேர்தலுக்கு பிறகு, கன்னியாகுமரியில் மட்டும் மீண்டும் கூட்டணி அமைகிறது. இதற்கு அதிமுக தலைமை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒப்புதல் அளித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“