சென்னை என்றால், சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ மவுண்ட் ரோடு எல்.ஐ.சி-யையோ காண்பிப்பதுதான் கொஞ்ச காலத்துக்கு முன்புவரை தமிழ் சினிமாவின் வழக்கமாக இருந்தது. சென்னையின் பொது அடையாளங்களாக இவை பெருமை ஏறி நிற்கும் நிலையில், கன்னிமாரா நூலகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் சென்னை வரலாற்றின் அறிவுசார் அடையாளங்களாகச் செம்மாந்து நிற்கின்றன.
மெட்ராஸில் நவீனக் கல்விமுறை என்பது 18-ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலேயே தொடங்கிவிடுகிறது. 1794-ல் கிண்டி பொறியியல் கல்லூரியும், 1857-ல் சென்னைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டு, தென்னிந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகப் பரிணமித்தன. இப்படியாக மெட்ராஸில் கல்விப் பணிகள் தொடங்கி வளர்ந்துவந்தபோதிலும், 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை மெட்ராஸில் நூலகம் என்ற அமைப்பு, அந்தச் சொல் சுட்டும் பொருளில் உருவாகியிருக்கவில்லை.
இந்தப் பின்னணியில், இங்கிலாந்தின் ஹெட்ஃபோர்டுஷையர் பகுதியில், ஹெட்ஃபோர்டு ஹீத் என்ற இடத்தில் அமைந்துள்ள ஹெய்லேபரி கல்லூரியில், 1860-ல் இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டிருந்தன. அங்கிருந்த நூலகத்தில் தேவைக்கு அதிகமாகச் சேகரமாகிவிட்ட புத்தகங்களை மெட்ராஸ் மாகாணத்துக்கு அனுப்புவது என்று முடிவுசெய்யப்பட்டது. அப்படி வந்துசேர்ந்த புத்தகங்கள் மெட்ராஸ் அருங்காட்சியகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மெட்ராஸின் மையப் பகுதியான எழும்பூரில் இருமுனையிலும் கூவம் நதி தொட்டுச் செல்லும் பாந்தியன் சாலையில், தோட்டங்களால் நிறைந்திருந்த பாந்தியன் திடலில் 1851-ம் ஆண்டு சென்னை அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் ஒருபகுதியாக நூலகம் அமைந்திருப்பதைப் போல், இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் புத்தகங்களைக் கொண்டு மெட்ராஸ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் ஒன்றைக் கேப்டன் ஜீன் மிட்செல் என்பவர் 1860-ம் ஆண்டு நிர்மாணித்தார். மெட்ராஸின் அறிவுச் செயல்பாட்டில் புது அத்தியாயம் ஒன்று அப்போது தொடங்கியது.
அருங்காட்சியக நூலக மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தச் சிறு நூலகம், 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அப்போது மெட்ராஸின் கவர்னராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்குத் தனி நூலகம் வேண்டும் என்பதை உணர்ந்து, 1890 மார்ச் 22 அன்று நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் முடிந்து 1896 ஏப்ரல் 16 தமிழ்ப் புத்தாண்டு அன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நூலகம் திறக்கப்பட்டாலும், அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி நடந்த அதிகாரபூர்வத் திறப்புவிழாவில், கன்னிமாரா பிரவுக்கு மரியாதை செய்யும்விதமாக, நூலகத்துக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்த, ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற நூலின் ஆசிரியர் எட்கர் தர்ஸ்டன், கன்னிமாரா நூலகத்தின் முதல் நூலகராகப் பொறுப்பேற்றார்.
தனிச்சிறப்பு வாய்ந்த கன்னிமாரா நூலகத்தின் முக்கியத்துவம் அதன் கட்டடத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. மெட்ராஸின் கட்டடக் கலையாகப் பரிணமித்த இந்தோ சராசனிப் பாணியில் அமைந்த சென்ட்ரல் ரயில் நிலையம், உயர் நீதிமன்றம், சட்டக் கல்லூரி, அருங்காட்சியகம் ஆகியவற்றை வடிவமைத்த, ஹென்றி இர்வின், கன்னிமாரா நூலகத்தையும் அதே பாணியில் உருவாக்கினார். அன்றைக்கு மெட்ராஸின் முதன்மை ஒப்பந்தக்காரராக இருந்த நம்பெருமாள் செட்டி இந்த நூலகக் கட்டடத்தைக் கட்டினார்.
பழைய கட்டடம் என இன்று அழைக்கப்படும், கன்னிமாரா நூலகத்தின் முதன்மைக் கட்டடமான இது, அரைவட்ட வடிவத்தில் அமைந்திருக்கிறது. அரைவட்ட முகப்பிலிருந்து தொடங்கும் நூலகத்தின் நீண்ட புத்தக அறைகளுக்கான சலவைக் கற்கள் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து, பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகப் படகுகளில் கொண்டுவரப்பட்டன. பெரும் கலையழகுடன், மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கட்டடத்தின் விதானம், தனித்த அழகைத் தாங்கியிருக்கிறது. அங்கிருந்து கீழிறங்கும் பெரும் ஜன்னல்களில், அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த வண்ணக் கண்ணாடிகள் வழியாகச் சூரிய ஒளி நூலகத்துக்குள் கவிகிறது. விதானம், ஜன்னல்கள் தொடங்கி, புத்தக அடுக்குகள்வரை நூலகத்தின் ஒவ்வோர் அம்சமும் நுண்ணிய வேலைப்பாடுகளால் இழைக்கப்பட்டிருக்கிறது. நூலகக் கட்டடத்தை வடிவமைத்த ஹென்றி இர்வினும், ‘ஜங்கிள் புக்’ எழுதிய கிப்ளிங்கும் நண்பர்கள் என்பதால், புத்தக அடுக்குகளின் மேல் சீரான இடைவெளியில் அமைந்திருக்கும் குரங்கு, யாழி போன்ற மரச்சிற்பங்கள், ‘ஜங்கிள் புக்’கின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு செதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படியாக இந்த நூலகம் அந்தக் கால மதிப்பீட்டில் ஐந்து லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
அருங்காட்சியகப் பொறுப்பாளரே நூலகராகவும் கூடுதல் பொறுப்பேற்க, 1930-களின் பிற்பகுதிவரை கன்னிமாரா நூலகம், பிரிட்டிஷாரின் மேற்பார்வையில் இயங்கியது. முதல் தனி நூலகராக ரா.ஜனார்த்தனம் என்பவர் 1939-ல் பொறுப்பேற்க, நூலக நிர்வாகம் இந்தியர்களிடம் வந்தது.
அதுவரை பின்பற்றப்பட்டுவந்த புத்தகங்களைப் பூட்டி வைக்கும் மூடிய புத்தக அடுக்கு முறையை நீக்கி, திறந்த புத்தக அடுக்கு முறையை ஜனார்த்தனம் அறிமுகப்படுத்தினார். நூலகப் பணியாளர்கள் மட்டுமே நூல்களை எடுத்துக் கொடுக்கும் வழக்கம் மாறி, வாசகர்களே புத்தகங்களை எடுத்து வாசிக்கவும், உறுப்பினர்கள் புத்தகங்களை இரவல் பெற்றுச் செல்லும் வசதியும் வந்தது. இந்த நடைமுறையே பிற்காலத்தில் பொது நூலகங்களிலெல்லாம் கொண்டுவரப்பட்டது.
அப்போதைய கல்வித் துறை அமைச்சர் அவினாசிலிங்கம், ‘இந்திய நூலகத் தந்தை’ டாக்டர் எஸ்.ஆர்.ரெங்கநாதன் ஆகியோரின் முயற்சியில் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதன்படி, மாநிலத்தின் மைய நூலகமாகக் கன்னிமாரா நூலகம் அறிவிக்கப்பட்டது.
Delivery of Books and Newspaper Act எனப்படும் ‘இந்திய நூல்கள் வழங்கல்’ சட்டம் கன்னிமாரா நூலகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. 1955-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி இந்தியாவில் பதிப்பிக்கப்படும் நூல்களின் பிரதி ஒன்று கன்னிமாரா நூலகத்திற்குக் கண்டிப்பாக அனுப்பிவைக்கப்பட வேண்டும். அதன்படி, இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்த மொழியிலும் வெளியாகும் நூல்கள், பருவ இதழ்கள், செய்தித்தாள்களின் பிரதிகள் நாள்தோறும் இங்கு வந்து குவிந்துகொண்டு இருக்கின்றன. கொல்கத்தா தேசிய நூலகம், தில்லி பொது நூலகம், மும்பை டவுன் ஹால் பொது நூலகம், இந்திய நாடாளுமன்ற நூலகம் ஆகியவற்றிலும் கன்னிமாரா நூலகத்தில் உள்ள நூல்களின் பிரதி ஒன்று இருக்கும். இந்தியாவின் நான்கு தேசிய வைப்பக நூலகங்களுள் (Depository Library) ஒன்றாக, கன்னிமாரா நூலகத்தை 1981-ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. ஐநா, யுனெஸ்கோ, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அமைப்புகளின் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும் தகவல் மையமாகவும் கன்னிமாரா விளங்குகிறது.
பேரறிஞர் அண்ணா தன் வாழ்நாளின் கணிசமான நேரத்தை கன்னிமாரா நூலகத்தில் செலவிட்டுள்ளார்; ராஜாஜி, சி. சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், சாண்டில்யன், சுஜாதா, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி எனப்படும் சென்னை இலக்கியச் சங்கம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், கீழ்த்திசை சுவடிகள் நூலகம் ஆகியவை ஒருகாலத்தில் கன்னிமாரா நூலகத்தில்தான் இயங்கிவந்தன.
இலக்கியம், வரலாறு, கலை, கலாசாரம், மருத்துவம், பொறியியல், அறிவியல், கணிதம், அரசியல், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தலைப்புகளிலும் ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது, மராட்டி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலுமாக எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்குள்ளன; உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டுகிறது.
தொடர்ந்து அதிகரித்துவந்த உறுப்பினர்கள், வாசகர்களின் வசதிக்காக, 1973-ம் ஆண்டு 55,000 சதுர அடி பரப்பில் மூன்று மாடிப் புதிய கட்டடம் கட்டித் திறக்கப்பட்டது. 1998-ல் 12,000 சதுர அடியில் மற்றொரு மூன்று மாடிப் புதிய கட்டடம் கட்டித் திறக்கப்பட்டது. இப்போது ஆங்கில நூல்கள் பிரிவு, குடிமைப்பணிக் கல்வி மையம், குழந்தைகள் நூலகம், பருவ இதழ் பிரிவு, குறிப்பு உதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, பாடநூல் பிரிவு, நுண்படப் பிரிவு (Microfilm Section), உருப்படப் பிரிவு (Digitisation Section) அரசு வெளியீடுகள் பிரிவு, ஆகிய பிரிவுகள் நூலகத்தில் உள்ளன. மாணவர்களின் தேவை கருதி பாடநூல் பிரிவு 1984-ல் தொடங்கப்பட்டது; தனி வருகைப் பதிவேடு பராமரிக்கும் அளவுக்குப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கன்னிமாராவில் வந்து படிக்கின்றனர்.
ஆரம்பக்காலத்தில் ஆங்கில நூல்களே அதிகம் இருந்தன. உலக நாடுகள் சிலவற்றின் வரலாறுகள், ஆங்கில ஆட்சிமுறை பற்றிய குறிப்புகள், ஓவியங்கள், பைபிள்கள் இருந்துள்ளன. 1553-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் அச்சிடப்பட்ட அரிய நூல்கள் கன்னிமாராவில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், லோக் சபா, ராஜ்ய சபா, தமிழ்நாடு சட்டப்பேரவை ஆகியவற்றில் நடந்த விவாதங்கள், 1871-ல் தொடங்கும் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகியவை குறித்த புத்தகங்கள் என, அரிய ஆவணங்களின் சேகரம் வாசகர்களைத் திகைக்கச் செய்கிறது.
கன்னிமாரா நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களின் தலைப்புகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தபடியே நூல் பற்றிய விவரங்களை இணையதளம் மூலம் வாசகர்கள் தெரிந்துகொண்டு, நேரில் வந்து நூல்களைப் படிக்க முடியும். பார்வைச் சவால் உடையவர்களும், செவித்திறன் சவால் உடையவர்களுக்கும் படிப்பதற்கு பிரெய்லி. ஒலிப்புத்தக வசதிகள் இங்கு உள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னிமாரா நூலகம் 125 ஆண்டுகளைக் கடந்து, அறியாமை இருள் விலக்கிக்கொண்டிருக்கிறது; அறிவுத் தேட்டம் கொண்டு தன்னை நோக்கி வரும் வாசகரை, வாசிப்பின் வழி புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும் கன்னிமாரா, தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகத் தலைநகரில் அறிவு ஒளி வீசிக்கொண்டிருக்கிறது!