புதுடில்லி: உக்ரைனில் சிக்கி உள்ள அனைத்து இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என விமானப்படை துணைத்தளபதி ஏர் மார்ஷல் சந்தீப் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க 3 விமானப்படை விமானங்கள் சென்றுள்ளன. 24 மணி நேரமும் மீட்பு பணி நடக்கும். நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெறுகின்றன.
மீட்பு பணியில் ஒரே நாளில் 4 விமானங்களை, விமானப்படையால் பயன்படுத்த முடியும். ஒரு விமானத்தில் 200 பேர் வரை அழைத்து வரப்படுவார்கள். நமது மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என உறுதி கூறுகிறேன்.
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், இந்திய விமானப்படைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அந்த இரு நாடுகளுடனும் இந்தியா வலிமையான உறவை கொண்டுள்ளது. இவ்வாறு சந்தீப் சிங் கூறினார்.
இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கூறுகையில், உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அவர்களில் கடந்த பிப்.,24 வரை 4 ஆயிரம் பேர் திரும்பினர். நேற்று வரை மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர். மற்ற இந்தியர்களையும் ருமேனியோ, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா, மோல்டோவா வழியாக அழைத்து வரப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு
உக்ரைனில் இருந்து விமானம் மூலம் டில்லி வந்தடைந்த இந்தியர்களை, விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் விரேந்திரகுமார் வரவேற்றார்.
Advertisement