உக்ரைனில் இன்னொரு இந்திய மாணவர் மரணமடைந்துள்ளார். ஆனால் இந்த மாணவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
ரஷ்யத் தாக்குதலில் சிக்கி திண்டாடிக் கொண்டுள்ளது உக்ரைன். பலமுனைத் தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. கீவ் நகர், கார்கிவ் நகர் ஆகியவை கடும் தாக்குதலை சந்தித்து வருகின்றன. விரைவில் கார்கிவ் நகரம் வீழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ரஷ்யாவிடம் போய் விட்டால், அடுத்த டார்கெட் கீவ் நகரம்தான். இதனால் தலைநகரைக் காக்க உக்ரைன் ராணுவம் தீவிரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கார்கிவ் நகரில் மளிகைக் கடை கியூவில் நின்றிருந்தபோது ரஷ்யப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இந்திய மாணவர் நவீன் என்பவர் மரணமடைந்தார். இந்தியர்களிடையே இந்த மரணம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வின்னிட்சியா என்ற நகரில் இன்னொரு இந்திய மாணவர் மரணமடைந்துள்ளார். ஆனால் இவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயர் சந்தன் ஜிந்தால். 21 வயதாகும் இவர் கடந்த நான்கு வருடங்களாக வின்னிட்சியாவில் தங்கிப் படித்து வந்தார். இவரது சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் பர்னாலா ஆகும்.
பிப்ரவரி 2ம் தேதி இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டது. இதையடுத்து இவரைப் பார்த்துக் கொள்வதற்காக பிப்ரவரி 7ம் தேதி இவரது தந்தை சிஷன் குமார் மற்றும் மாமா கிருஷ்ண குமார் ஆகியோர் உக்ரைன் சென்றிருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சந்தன் ஜிந்தால் மரணமடைந்துள்ளார்.ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்னொரு மாணவர் அதே உக்ரைனில் உடல் நலக்குறைவால் மரணமடைந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கார்கிவ் நகரிலிருந்து இந்தியர்கள் அனைவரும் விரைவாக வெளியேறுமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.