புது டில்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் இன்றும்(மார்ச் 3) மற்றும் நாளை (மார்ச் 4) ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
திங்களன்று மாலை மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்த தாழ்வு பகுதி, இன்று (மார்ச் 2) காலை 8.30 மணி அளவில் தெற்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் மத்தியப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் வட தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு அதிகம். இதனால் மார்ச் 3 முதல் 5 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மார்ச் 4 முதல் 5 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவின் கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்படும். இதனால் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Advertisement