கீவ்: உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்சான் நகரையும் ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் தெற்குப் பகுதியின் நகரான கெர்சான் இப்போது ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்துள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து கெர்சானில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில், கெர்சானில் தொடர்ந்து ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை ரஷ்ய படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 6 நாட்களாக நடந்து வரும் போரில் சுமார் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் தெரியவந்துள்ளது. இதனால், கீவ் பகுதியில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.