புதுடெல்லி:
போர் நடைபெற்று வரும் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை மாநில எல்லைக்கு இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து இந்த சிறப்பு விமானங்களில் இந்தியா வருகின்றனர்.
இந்நிலையில், மீட்பு நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு இதுவரை 15 விமானங்கள் இந்தியா திரும்பியுள்ளன. உக்ரைனில் இருந்து இதுவரை 3,352 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி கடைசி வாரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 17,000 இந்தியர்கள் உக்ரைன் எல்லையை விட்டு வெளியேறி உள்ளனர்.
உக்ரைனில் இருந்து எல்லை தாண்டும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக லிவிப் நகரில் தற்காலிக தூதரக அலுவலகத்தை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தூதரகக் குழுவின் பெரும்பாலானோர் இப்போது லிவிப் நகரில் உள்ளனர்.
இதேபோல், கிழக்கு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவ, நாம் அங்கு செல்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். நமது குழுக்கள் அங்கு செல்ல முடியுமா என்று பார்க்கிறோம். அது எளிதல்ல. ஏனெனில் அங்கு செல்லும் பாதை எப்போதும் திறந்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று இரவு மீண்டும் பேசுவாரா? என கேட்டதற்கு, பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருவதாகவும், இதுதொடர்பான தகவல்கள் அவ்வப்போது தெரிவிப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதிலளித்தார்.