புதுடெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படையும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று கூறும்போது, ‘‘இந்திய விமானப் படையின் மூலம் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை குறைவான கால அளவில் உக்ரைனிலிருந்து மீட்டுக் கொண்டுவர முடியும். மேலும், அத்தியாவசிய உதவிகளையும் வழங்க முடியும். எனவே, இப்பணியில் விமானப்படை ஈடுபடமுன்வர வேண்டும்’’ என்றார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி17 ரக விமானங்கள் இப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் சிறப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 2-வது சிறப்பு விமானம் டெல்லியிலிருந்து ஸ்லோவாக்கியா நாட்டில் உள்ள கோசிஸே நகருக்குச் சென்றது. இந்த விமானம் நாளை டெல்லி திரும்பும் எனத் தெரிகிறது. மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியா சார்பில் இவ்விமானத்தில் சென்றுள்ளார்.
உக்ரைனில் விமான சேவை முடங்கியுள்ளதால், அதன் அண்டை நாடுகளான ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய மாணவர்களை வரச்செய்து அங்கிருந்து அவர்கள்இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இதுவரையில் 8,000-க்குமேற்பட்டோர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.