உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 7-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கிரிமியாவை ஒட்டியுள்ள கிழக்குப் பகுதியில் மட்டும் ரஷியா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டதால், அமெரிக்க போன்ற நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வெளிநாட்டினர், வெளிநாட்டில் இருந்து உக்ரைன் சென்று படிக்கும் மாணவர்கள் கீவ், கார்கீவ் போன்ற நகரில் இருந்து வெளியேறாமல் இருந்தனர்.
ஆனால் ரஷிய படைகள் கீவ், கார்கீவ் நகரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகின்றன. இதனால் இனிமேல் கீவ், கார்கீவ் நகரில் இருப்பது பாதுகாப்பானது அல்ல என உணர்ந்த வெளிநாட்டினர் மேற்கு எல்லையோரத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக போலந்து நாட்டில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்திய அரசு முழு வீச்சில் கீவ் நகரில் உள்ளவர்களை அண்டை நாடுகளுக்கு நகர்த்த முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக தற்போது கீவ் நகரத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல விசா அவசியம். பல்வேறு ஆவணங்கள் அவசியம். தற்போது கொரோனா வழிகாட்டு முறைகள் நடைமுறையில் இருப்பதால் தடுப்பூசி சான்றிதழும் தேவைப்படுகிறது. அண்டை நாடுகளுக்கு செல்ல அனுமதி பெறுவது அவசியம்.
ஆனால், உக்ரைனின் அண்டை நாடுகளிடம் இந்திய அரசு, இந்தியாவை சேர்ந்தவர்களிடம் விசா கேட்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விலக்குகள் கேட்டிருந்தது. அண்டை நாடுகளும் அதற்கு சம்மதம் தெரிவித்தன. இதனால் இந்திய கொடி ஏந்தி மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறினர். இந்திய கொடியும் செல்லும் மாணவர்களுக்கு அண்டை நாடுகள் எளிதாக அனுமதி அளித்தன.
இந்திய மாணவர்களோடு பல்வேறு நாட்டின் மாணவர்களும் உக்ரைனில் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் இந்திய கொடியை ஏந்தி அண்டை நாடுகளுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் இருவர்கள் தாங்கள் தங்கிய குடியிருப்புகளில் உள்ள திரைச்சீலையை எடுத்து அதில் இந்திய கொடி வண்ணத்தை தெளித்து, இந்தியர்களின் உதவியுடன் கொடியை பிடித்துக் கொண்டு ருமேனியாவின் புகாரெஸ்ட் வந்தடைந்துள்ளனர். இந்திய கொடி மற்றும் இந்தியர்களால் தங்களுக்கு எளிதாக எல்லையை கடக்க அனுமதி கிடைத்தது என்றனர்.