வாஷிங்டன்: ‛உக்ரைன் மீதான தாக்குதலால் ரஷ்ய அதிபர் புடின் ஆதாயம் பெறலாம் ஆனால், நீண்ட காலத்திற்கு அதற்கான அதிகமான விலையை அவர் கொடுக்க வேண்டியிருக்கும்’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பார்லிமென்டில் அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரை: நாங்கள், அமெரிக்கா மற்றும் உக்ரேனிய மக்களுடன் துணை நிற்கிறோம். அமெரிக்காவும் நமது நட்பு நாடுகளும் நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நமது கூட்டு சக்தியின் முழு பலத்துடன் பாதுகாப்போம். உக்ரைன் மக்கள் தைரியத்துடன் போராடுகிறார்கள். இந்த தாக்குதலில் புடின் ஆதாயம் பெறலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அதற்கான அதிகமான விலை அவர் கொடுக்க வேண்டியிருக்கும்.
அமெரிக்க நீதித்துறை, ரஷ்ய தன்னலக்குழுக்களின் குற்றங்களை கண்காணிக்க ஒரு பிரத்யேக பணிக்குழுவைக் கூட்டி வருகிறது. உங்களின் படகுகள், உங்கள் சொகுசு குடியிருப்புகள், உங்கள் தனியார் ஜெட் விமானங்களைக் கண்டுபிடித்து கைப்பற்ற எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் நாங்கள் இணைகிறோம். அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கிறோம். உக்ரைன் தலைநகர் கீவ்வை, ராணுவ டாங்குகளுடன் புடின் சுற்றி வரலாம். ஆனால், உக்ரைன் மக்களின் இதயங்களையும், ஆன்மாக்களையும் அவர் ஒருபோதும் பெறமாட்டார்.
உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுடன் அமெரிக்க படைகள் நேரடியாக மோதாது. உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகளை அனுப்பியதற்காக விளாடிமிர் புடினை உலகம் தனிமைப்படுத்தியது. புடினின் போர் திட்டமிடப்பட்ட ஒன்று. அதனால்தான் ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை அவர் நிராகரித்துவிட்டார். உக்ரைனில் தாக்குதல் நடத்தினால் மேற்குலக மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்வினையாற்ற மாட்டார்கள் என புடின் தவறாக கணித்துவிட்டார். நாங்கள் அவற்றுக்கு தயாராகவே இருந்தோம்.
உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கவும், அவர்களின் துன்பங்களைக் குறைக்கவும் அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உதவும். இந்த சகாப்தத்தின் வரலாறு எழுதப்படும் போது, அதில் உக்ரைன் மீதான புதினின் போர் ரஷ்யாவை பலவீனமாகவும், ரஷ்யாவைத் தவிர்த்து மற்ற உலக பகுதிகளை வலுவானதாகவும் காட்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Advertisement