மாஸ்கோ: உக்ரைன் எல்லையை கடந்து அந்த நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவப் படைகளில் ‘ஸ்பெட்ஸ்நாஸ்’ என்ற பிரிவும் உள்ளது. இது அதிநவீன சிறப்பு ராணுவப் பிரிவாகும்.
பெலாரஸ் நாட்டுடன் ரஷ்யாகூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டபோது, அங்கு இப்படை அனுப்பி வைக்கப்பட்டது. உலகெங்கிலும் போர்க் காலம் மற்றும் அமைதிக் காலத்தில் இப்படை பணியாற்றியுள்ளது.
இது ரஷ்யாவின் ராணுவப் புலனாய்வு அமைப்பான ஜிஆர்யு-வின் பிரத்யேக கமாண்டோ பிரிவாகும். 1949-ல் ஸ்பெட்ஸ்நாஸ் உருவாக்கப்பட்டது. உளவு மற்றும் நாசவேலைகள் நடத்துவதே இதன் நோக்கமாகும். சோவியத் காலத்தில் ஸ்பெட்ஸ்நாஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியது. 1979-ல் ஆப்கானிஸ்தான் படையெடுப்பில் இப்பிரிவு முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
ஸ்பெட்ஸ்நாஸ் சிறப்பு பிரிவில் 1,500 முதல் 2,000 வரையிலான கமாண்டோக்கள் உள்ளதாக பிபிசி தெரிவிக்கிறது. இந்தப் பிரிவு பெடரல் பாதுகாப்பு அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது.
சமீபத்திய சிரியா நெருக்கடியின் போதும் 20 ஆண்டுகளுக்கு முன் செசென்ய கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்குவது போன்ற பெரிய சர்வதேச நிகழ்வுகளிலும் ரஷ்யாவால் ஸ்பெட்ஸ்நாஸ் பயன்படுத்தப்பட்டது.
பனிப்போர் காலத்தில் வான்வழி போர்க்கள உளவுப் படையாகவும் இதன் வீரர்கள் செயல்பட்டனர்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு, ஸ்பெட்ஸ்நாஸ் வீரர்கள் பலவித பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியில் நியமிக்கப்பட்டனர்.
ஸ்பெட்ஸ்நாஸ் பிரிவுகளில் ஒன்றான வேகா, அணுசக்தி சம்பவங்களை கையாளுவதில் நிபுணத்துவம் பெற்றது. ஃபேகல்அல்லது டார்ச் என்று அழைக்கப்படும் மற்றொரு பிரிவு, பணயக் கைதிகள் சூழ்நிலையை கையாளுவதில் திறமை மிக்கது.
200 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான ராணுவப் புலனாய்வு சேவையை கொண்ட ரஷ்யாவில் இது உயரடுக்குப் படை என்பதால் தேர்வுமுறை கடினமானது.
ஸ்பெட்ஸ்நாஸ் சிப்பாய் ஆவதற்கான பயிற்சி ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும். சில ரஷ்ய வலைத்தளங்களில் கிடைக்கும் தகவல்களின்படி பணியில் இணைத்துக் கொள்ளும் நடைமுறை மிருகத்தனமானது மற்றும்இது 5 மாதங்களுக்கு நீடிக்கக்கூடியது. இந்த சிப்பாய்கள் பெரும்பாலும் மற்ற ராணுவப்பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் பண்பில் பொதுவாக கடினத்தன்மை கொண்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.