புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகம், ஒடிசா, டெல்லி, ஆந்திரா, புதுவை ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல மனு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. குறிப்பாக சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது மட்டுமில்லாமல், அவர்களது பெற்றோர்களும் தடுப்பூசி செலுத்தியே ஆக வேண்டும் என கட்டாயப் படுத்தப்படுகிறது. இது தனிமனித உரிமை மீறல் மட்டுமில்லாமல், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. மேலும் கொரோனாவுக்கு முக்கியம் தடுப்பூசி என்றால், அதனை செலுத்திக் கொண்ட பிறகும் மீண்டும் நோய் தொற்று வருவது ஏன்? குறிப்பாக இந்த விவகாரத்தில் எங்களுக்கு மூன்று முக்கிய கோரிக்கைகள் உள்ளது. அவை, தடுப்பூசி தொடர்பான தரவுகளை வெளியிட வேண்டும். பாதகங்கள் குறித்து புகாரளிக்கும் விதமாக அதுசார்ந்த கணினியை மறுசீரமைக்க வேண்டும். தடுப்பூசி குறித்த முழு விவரங்கள் கொண்ட ஆதாரத்தையும் வெளியிட வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பட்டி, ‘‘நாடு முழுவதும் 96 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை கட்டாயமாக்க வேண்டாம் என்பது தான் ஒன்றிய அரசின் நிலைப்பாடாகவும் உள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு கூட கோவாக்சின் தடுப்பூசி தான் செலுத்தப்படுகிறது என விளக்கமளித்தார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.