புதுடெல்லி:
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
கார்கிவ் ரெயில் நிலையத்தில் உள்ள நிலவரம், தங்களின் நிலை குறித்து இந்திய மாணவர்கள் வீடியோக்கள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.
கடும் சிரமங்களை சந்தித்து ரெயில் நிலையத்திற்கு வந்தால் அங்கிருந்து ரெயிலில் ஏற உக்ரைன் போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், கேட்டால் தங்களை அடித்து உதைப்பதாகவும் கண்ணீர்மல்க கூறுகின்றனர் மாணவர்கள்.
உக்ரைனில் தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு ஒரு மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரெயில்களில் ஏற விடாமல் உக்ரேனியர்கள் தடுத்து மிரட்டுவதாகவும், பெண்கள் தாக்கப்பட்டதாகவும் ஒரு மாணவர் விவரிக்கிறார்.
கண் முன்னால் ரெயில் இருந்தும் இந்திய மாணவர்களால் அந்த ரெயிலில் ஏற முடியவில்லை. மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், இந்திய தூதரகம் தெரிவித்த இடங்களை சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.