அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துவரும் நிலையில், சீனா மற்றும் பெலாரஸ் நாடுகள் மட்டும் ரஷ்யாவை இதுவரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
ஆனால் பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா மற்றும் கனடா, மெக்சிக்கோ நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிராக தமது கருத்துகளை முன்வைப்பார் என வெள்ளைமாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், நேட்டோ அமைப்பை ரஷ்ய ஜனாதிபதி குறைவாக மதிப்பிட்டுவிட்டார், புடின் உக்ரைன் மீது முன்னெடுத்துள்ள படையெடுப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது மட்டுமின்றி அவர் இராஜதந்திர முயற்சிகள் அனைத்தையும் நிராகரித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளும் நேட்டோவும் கண்டுகொள்ளாது என்றே புடின் எண்ணியிருக்கலாம், மட்டுமின்றி நேட்டோ அமைப்பில் பிரிவினையை ஏற்படுத்தலாம் எனவும் அவர் கனவு கண்டிருக்கலாம்.
புடின் அங்கே தான் தவறிழைத்தார், நாங்கள் எப்போதும் தயாராகவே இருந்தோம்.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி புடினை சர்வாதிகாரி என குறித்த உரையில் ஜோ பைடன் குறிப்பிடுவார் என்றே தெரிய வந்துள்ளது.
வரலாற்றில் இடம்பெற்ற சர்வாதிகாரிகள் குழப்பங்களை மட்டுமே உருவாக்கியுள்ளனர். அதற்கான விலையை அவர்கள் கண்டிப்பாக அளித்தே ஆகவேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்காவும் 29 நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் நேட்டோ எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டு வந்தாலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
முன்னதாக ஜோ பைடனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உலக நாடுகளுக்கு ஒரு தீர்க்கமான செய்தியை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.