எந்த முன்னேற்றமும் இல்லாத ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை; உயிர் பலி 352 ஆக அதிகரிப்பு

கீவ்: பெலாரஸ் எல்லைப் பகுதியில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து 5.2 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டதாக ஐ.நா கூறுகிறது.

நேட்டோ நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்ய அணு ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் சோய்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே 5-வது நாளாக நேற்றும் கடுமையான சண்டை நடைபெற்றது.

போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.

அப்போது உக்ரைன் தரப்பில்பல்வேறு விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன. போரை உடனடியாக நிறுத்த வேண்டும். தங்கள் நாட்டில் இருந்து ரஷ்யப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டில் ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா பகுதியை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

2 நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனில் நவீனகால நாஜி ஆட்சியை அகற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் நேட்டோவில் இணையக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ரஷ்யா விதித்ததாகக் கூறப்படுகிறது. இருதரப்பும் தங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நேற்றைய போரில் பெர்ட்யான்ஸ்க், எனிஹோடர் ஆகிய 2 முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றின. தலைநகர் கீவில் இருந்து வெளியேற விரும்புகிறவர்கள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது. கீவ்-வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக அவர்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் நேற்று அறிவித்தது. இதன்மூலம் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று தெரிகிறது.

நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாவிட்டால் நேட்டோ நாடுகளும் போரில் பங்கேற்க நேரிடும் என்று பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலடியாக நேட்டோ நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அணு ஆயுத படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

500 அணு ஆயுதம்

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் சோய்கு நேற்று கூறும்போது, “அதிபர் புதினின் உத்தரவுபடி நேட்டோவின் அச்சுறுத்தலை முறியடிக்க தரை, வான், நீர்மூழ்கி அணுஆயுத படைகள் தயார் நிலையில் உள்ளன. எந்த சூழலையும் எதிர்கொள்ளும் திறன் ரஷ்யாவுக்கு உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதிபர் புதினின் செய்தித்தொடர்பாளராக முன்னிறுத்தப்படும் ரஷ்யாவின் மூத்த செய்தியாளர் திமித்ரி கிசெல்யாவ் நேற்று கூறும்போது, “ரஷ்ய நீர்மூழ்கிகளில் சுமார் 500 அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின்மூலம் அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ நாடுகளையும் அழிக்க முடியும். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் போரில் குதித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.