அமிதா பச்சனின் ஜுண்ட் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட நடிகர் அமீர்கான், நாம் கடந்த காலத்தில் கற்றுக்கொண்டதை இந்த படம் உடைப்பதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் நடித்துள்ள திரைப்படம் ஜுண்ட். நாகராஜ் போபத்ராவ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பூஷன் குமார்
தயாரித்துள்ளார். வறுமை சூழ்ந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகளை இணைத்து கால்பந்து அணியை உருவாக்க காரணமாக இருந்த சமூக ஆர்வலரான விஜய் பார்சே என்பவரின் உண்மை கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. அந்த கதாபாத்திரத்தில், அமிதா பச்சன் நடித்துள்ளார்.
மார்ச் 4ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் சிறப்புக்காட்சியை நடிகர் அமீர்கான் கண்டு ரசித்தார். படத்தைப்பார்த்த பின் பேசிய அமீர்கான், “என்ன ஒரு படம். மை காட். மிகச்சிறந்த படமாக உருவாகியிருக்கிறது ஜூண்ட்.
கடந்த 20 ஆண்டுகளாக நாம் கற்றுக்கொண்டதை இந்த படம் உடைக்கிறது” என்று கண்ணீரை துடைத்தபடி பேசினார். தொடர்ந்து, ”படத்தின் சிறப்புக்காட்சியின்போது அனைவரும் எழுந்த நின்று கைத்தட்டுவது என்பது இதுவே முதன்முறை. இந்தியாவின் சிறுவர், சிறுமிகளின் எமோஷனை நீங்கள் பதிவு செய்திருக்கும் விதம் அட்டகாசமாக இருக்கிறது. சிறுவர்கள் நடிப்பில் மிரட்டியுள்ளனர். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது ஒரு தனித்துவமான படைப்பு” என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.