2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்கே நட்சத்திர வீரர் தீபக் சாஹர் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாஹர் குறைந்தபட்சம் எட்டு வாரங்கள் விலகுவார், இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகளை அவர் தவறவிட நேரிடும் என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை அணி 14 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிப்ரவரி 20ம் திகதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்தும் தீபக் சாஹ்ர விலகினார்.
தற்போது 29 வயதான தீபக் சாஹர் காயத்திலிருந்து குணமடைவதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார்.
மார்ச் 26ம் திகதி 2022 ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தீபக் சாஹரின் உடல்நிலை குறித்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இறுதி அறிக்கைக்காக சென்னை அணி காத்திருக்கிறது.