காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் 360 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஐபிசிசி, இனிவரும் காலத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேரிடர்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து ஐ.பி.சி.சி எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையிலான குழு வெளியிட்ட ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ’கடுமையான மற்றும் தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகள் காரணமாக உலகம் முழுவதும் இயற்கைச் சூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படத் தொடக்கியுள்ளன.
> உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிப்படையும் நிலையில் வாழ்கின்றனர்.
> தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் புவி வெப்பநிலை உயர்வால் மீள முடியாத பாதிப்புகள் ஏற்பட்டு, இயற்கை மற்றும் மனித அமைப்புகள் இனிமேல் தகவமைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை வரும் காலங்களில் ஏற்படும்.
> தற்போது உலக நாடுகளில் நிலவக் கூடிய சூழலியலுக்கு எதிரான வளர்ச்சிக் கொள்கைகள், மனிதர்களையும் சூழல் அமைப்புகளையும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பதே உண்மை.
> விளிம்பு நிலையில் அதிகம் பேர் வசிக்கும் மற்றும் காலனியாதிக்கம் நிலவுகிற பகுதிகளில் கணிசமான அளவில் மனிதர்களும் சூழல் அமைப்புகளும் காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிப்படைகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும் பட்சத்தில் தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்கள் அதிகரிக்கும்.
> இந்தப் பேரிடர்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏற்படப் போகும் பாதிப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியாது என்பதே உண்மை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும் நாளுக்கு நாள் சிக்கலானதாகவும் கையாள்வதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறக் கூடவுள்ளது.
> ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிர காலநிலை பேரிடர்கள் நிகழும். அத்தகைய சமயங்களில் காலநிலை மாற்றத்தை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு சில புதிய பிரச்சினைகளை உருவாக்கும்.
உதாரணத்துக்கு, காலநிலை மாற்றத்தின் காரணமாக, 2006-2016 வரை வடக்கு, கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வறட்சிகள் பங்களித்தன. இதில் 36 சதவீத நாடுகளில், கடுமையான வறட்சி ஏற்பட்டு, ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா வைரஸால் உண்டான பெருந்தொற்று மக்களையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதற்கிடையில்தான் பெரு வெள்ளம், அதி தீவிர கனமழை, காட்டுத்தீ, ஆழிப்பேரலை, வெப்ப அலைகள், கடுமையான பனிப்பொழிவு, வறட்சி, கடல் நீர் மட்ட உயர்வு, கடல் நீர் உட்புகுதல், நிலச்சரிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு தீவிர பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.
புவி வெப்பமடைதலைக் குறைக்க நாம் கடந்த காலங்களில் எடுத்த மற்றும் தற்போது எடுத்துக் கொண்டிருக்கிற எந்த நடவடிக்கையும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துகிற வளர்ச்சிப் பாதையில் நம்மை நிலை நிறுத்தவில்லை.
> அடுத்த சில ஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்து புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்தாவிட்டால் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள நாம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் வீணாய்ப் போகும். இப்புவியின் உயிர்ப்பன்மையம் மற்றும் சூழல் அமைப்புகளை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் ஏற்கெனவே சீர்கெட்ட இப்பூமியின் 30 முதல் 50 விழுக்காடு நிலம், நன்னீர் மற்றும் கடற்பகுதியை மறுசீரமைப்பு செய்வது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஐபிசிசி: Intergovernmental Panel on climate change என்றழைக்கப்படும் இந்த அமைப்பு 1988-ம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தால் தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் கொள்கைகளை உருவாக்க அரசாங்கங்களுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களை வழங்குவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.