புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று அதிகாலை ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 அமெரிக்க டாலராக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்பட்டது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக அதிகரித்தது. அதன் காரணமாக சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்ந்து இருப்பதால் இந்தியாவிலும் பெட் ரோல்-டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே கச்சா எண்ணை விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை சரிகட்டுவதற்காக அவசரகால கையிருப்பை எடுப்பதற்கு சர்வதேச எரிசக்தி முகமை நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்த அமைப்பில் இந்தியா உள்பட 31 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 31 நாடுகளும் தற்போது 150 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை கையிருப்பில் வைத்துள்ளன.
அந்த 150 கோடி பீப்பாய் இருப்பில் இருந்து 6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை வெளியில் எடுத்து பயன்படுத்த எரிசக்தி முகமை நாடுகள் முடிவு செய்துள்ளன. இதன்மூலம் கச்சா எண்ணெய்க்கான தேவை கணிசமாக குறையும். இதனால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவில் 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. அதில் கணிசமான பீப்பாய் எண்ணெய் வெளியில் எடுக்கப்பட உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை மிக அதிகமாக உயராது என்று தெரியவந்துள்ளது.
அதே சமயத்தில் அடுத்த மாதம் முதல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.