’கலைஞர், தளபதி, செந்தில்பாலாஜி அறிய…’ – கோவையில் பதவியேற்ற திமுக கவுன்சிலர்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட திமுக கவுன்சிலர்கள், ‘கலைஞர் அறிய’, ‘தளபதி அறிய’, ‘அமைச்சர் செந்தில்பாலாஜி அறிய’ என்று கூறி, பதவியேற்றுக் கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பேரூராட்சியில் 9 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 802 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர், கடந்த 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சிகளின் 198 வார்டுகள், பேரூராட்சிகளின் 504 வார்டுகள் என மொத்தம் 802 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் மொத்தம் 811 கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று (மார்ச் 2) நடந்தது. மாநகராட்சியின் 100 வார்டு கவுன்சிலர்களுக்கும், பெரியகடைவீதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள விக்டோரியா மன்றக் கூட்ட அரங்கில் பதவியேற்பு நிகழ்வு நடந்தது. மாநகராட்சியின் ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலரான ராஜகோபால் சுன்கரா, வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், மதுக்கரை, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி ஆகிய 7 நகராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 198 கவுன்சிலர்களுக்கும், அந்தந்த நகராட்சி அலுவலகத்தில் இன்று பதவியேற்பு விழா நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர்களான அந்தந்த நகராட்சிகளின் ஆணையர்கள் கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றனர்.

அதேபோல், அன்னூர், ஆனைமலை, இருகூர், கோட்டூர், சிறுமுகை, சூலூர், பெரியநாயக்கன்பாளையம், வெள்ளலூர், வேட்டைக்காரன்புதூர், ஒத்தக்கால் மண்டபம், ஒடையகுளம், கண்ணம்பாளையம், கிணத்துக்கடவு, சமத்தூர், எஸ்.எஸ்.குளம், சூளேஸ்வரன்பட்டி, தாளியூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பள்ளபாளையம், போளுவாம்பட்டி, பெரிய நெகமம், பேரூர், வேடபட்டி, நம்பர் 4 வீரபாண்டி, ஆலாந்துறை, இடிகரை, எட்டிமடை, செட்டிபாளையம், திருமலையாம்பாளையம், தொண்டாமுத்தூர் மோப்பிரிபாளையம் ஆகிய 33 பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 513 கவுன்சிலர்களுக்கும் (வார்டு உறுப்பினர்கள்) இன்று பதவியேற்பு விழா அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் நடந்தது.

தேர்தல் அலுவலர்களான அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

இதில், திமுக கவுன்சிலர்கள் ’கலைஞர் அறிய, தளபதி அறிய, அமைச்சர் செந்தில்பாலாஜி அறிய’ என்று கூறி பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நடந்த இடங்களுக்கு வெளியே மெகா திரை அமைக்கப்பட்டு இருந்தது. அதன் மூலம் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் பதவியேற்பை பார்வையிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.