கார்கிவ்: கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் ரஷ்ய படைகள் தாக்குவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனின் மிக முக்கிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தாக்குதலில் நேற்று கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இந்த நிலையில், ஏழாவது நாளாக இன்றும் ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு துறை தரப்பில் கூறும்போது, “ரஷ்யப் படைகள், உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கார்கிவ் நகரில் படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. மருத்துவமனைகள், அரசு அலுவலங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. உக்ரைனுக்கு உதவ நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்துமே ரஷ்ய விமானப்படை தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே, “உக்ரைன் தோல்வியடைந்துவிட்டால் ரஷ்யப் படைகள் நேட்டோ நாடுகளின் எல்லைகளில் வந்து நிற்கும். நாளை இதே நிலைமை நேட்டோ நாடுகளுக்கும் ஏற்படலாம். இங்கே ஒவ்வொரு நாளும் போர் நடக்கிறது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அணிவகுக்கும் ரஷ்ய ராணுவ வாகனங்கள்: முன்னதாக, உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் தெரியவந்துள்ளது. இதனால், கீவ் பகுதியில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனிடையே, ரஷ்ய தாக்குதலில் இதுவரை 536 பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் லிஸ் ட்ராஸ்லர் தெரிவித்துள்ளார்.