குண்டு வீசுவதை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள்: ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

கீவ்: உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

சிஎன்என், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூட்டாக இணைந்து அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஒரு பேட்டி எடுத்துள்ளன. பேட்டிக்கான இடம், ராணுவக் கட்டுப்பாட்டில் பலத்த பாதுகாப்புடன் இருந்துள்ளது. அதிபர் ஜெலன்ஸ்கி தாடியை மழிக்காத முகத்துடன், ஒரு டிஷர்ட், பேன்ட், பூட் என்று காட்சியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியின்போது அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி, “உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும். நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்துமே ரஷ்ய விமானப்படை தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இது ஒரு தடுப்பு நடவடிக்கை தான். இதன்மூலம் நாங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உறுப்பு நாடுகளை இழுத்துவிடுவதாக நினைக்க வேண்டாம்.

உக்ரைனிலிருந்து பத்திரமாக வெளியேற நிறைய அழைப்புகள் வந்தன. நான் எதையும் ஏற்கவில்லை. எங்கேயும் போகப்போவதும் இல்லை. நேட்டோ ஒருவேளை எங்களின் உறுப்பினர் கோரிக்கையை ஏற்காவிட்டாலும், சட்டத்திற்கு உட்பட்டு அளிக்கக் கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தையாவது நல்குமாறு நேட்டோவுடன் வேண்டுவோம்” என்றார்.

உக்ரைன் அதிபரின் பேட்டி சென்றுகொண்டிருந்தபோதே, ரஷ்ய ஏவுகணை ஒன்று அரசு செய்தி சேனல் கோபுரம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கியிடம் அவசர செய்தி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், “நேட்டோ எங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், எங்களின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் பேண, எங்கள் எல்லைகளைப் பாதுகாக்க, அண்டை நாடுகளுடன் நாங்கள் கொண்டிருக்கும் உறவைப் பேண, நாங்கள் முழுமையாக பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்வதற்கான உதவிகளை சட்டத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டும்.

உக்ரைன் தோல்வியடைந்துவிட்டால் ரஷ்யப் படைகள் நேட்டோ நாடுகளின் எல்லைகளில் வந்து நிற்கும். நாளை இதே நிலைமை நேட்டோ நாடுகளுக்கும் ஏற்படலாம். இங்கே ஒவ்வொரு நாளும் போர் நடக்கிறது. அன்றாடம் உதவிகளும் தேவைப்படுகின்றன. உலக நாடுகள் உதவிகளைத் துரிதப்படுத்த வேண்டும்” என்றார்.

என் பிள்ளைகளைப் பார்த்து 2 நாள் ஆகிவிட்டது.. – “நான் இங்கு தினமும் உக்ரைனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுக்கும் வேலையைச் செய்கிறேன். மிஞ்சிய நேரத்தில் தூங்குகிறேன். என் பிள்ளைகளைப் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. உக்ரைன் எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும் என்று கேட்காதீர்கள். தாக்குப்பிடிப்பது அல்ல விஷயம். தேசத்துக்கான போராட்டம்தான் முக்கியம். இது எங்களின் தாய்நாடு. நாங்கள் அதைப் பாதுகாக்கும் பணியில் உள்ளோம். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பாதுகாக்கும் பணியில் உள்ளோம். எங்களின் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வாழும் உரிமைக்காக போராடுகிறோம்.

ரஷ்யர்களுக்கு இங்கு என்ன வேலை? அவர்களுக்கு எங்கள் மக்களின் மனநிலை புரியாது. எங்கள் நாடு, எங்கள் கொள்கை என்று எதுவுமே தெரியாது. ரஷ்யர்கள் இங்கே கொல்வார்கள் அல்லது கொல்லப்படுவார்கள். இது மட்டுமே அவர்களுக்கு தெரியும். எங்கள் மண்ணில் நாங்கள் வலிமையுடன் இருக்கிறோம். இறுதி வரை வலிமையாக இருப்போம்” என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

ஏற்கெனவே முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில், பெலாரஸின் கோமல் நகரில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கியின் பேட்டி கவனம் பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.