திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் பல மாணவ மாணவிகளுக்கு நாடக கலை தொடர்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாடக கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 13ஆம் தேதி திடீரென தற்கொலை செய்துகொள்ள முயன்றார். தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவியை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து மாணவியிடம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஏன்? என விசாரித்தனர்.
அப்போது அந்த மாணவி தான் கல்லூரி பேராசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் மேலும் அந்தப் பேராசிரியர் தன்னை கற்பழித்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தங்களது சக மாணவி ஒருவர் பேராசிரியர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் ஆத்திரத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தீவிரமடைந்த போராட்டத்தை அடுத்து போலீசார் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்தப் பேராசிரியர் அதே நாடக கல்லூரியில் பணிபுரியும் சுனில் குமார் (வயது 46)என்பது தெரியவந்தது.
ஒரு வாரமாக தீவிரமடைந்த மாணவர்களின் போராட்டத்தை அடுத்து போலீசார் அந்தப் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் அவரை கண்ணூரில் வைத்து கைது செய்தனர்.