`சாதிய பாகுபாடு, நிரப்பப்படாத இடங்கள், மாணவர் இடைநிற்றல்!' – 4 ஐ.ஐ.டி-களின் அதிர்ச்சி தகவல்கள்

“ஐ.ஐ.டி எனப்படும் உயர்கல்வி நிறுவனத்தின் சென்னை வளாகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கொடுமைகளும் அநீதிகளும் இழைக்கப்படுகின்றன. இதற்கு அந்த ஐ.ஐ.டி நிறுவனம், ஆர்.டி.ஐ மூலமாகத் தந்திருக்கும் ஆவணங்களே சாட்சி” என்று அதிர வைக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக்.

“எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களைப் பொறுத்தவரை மொத்தம் 22.5% மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அதிகபட்சமாக 17% மாணவர்கள்தான் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தமுள்ள ஆசிரியப் பணியிடங்களில் வெறும் 3% பேர்தான் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்” என்று பேரதிர்ச்சி கிளப்புகிறார் கார்த்திக்.

Education (Representational Image)

சென்னை ஐ.ஐ.டி-யில் பயிலும் கேரளாவைச் சேர்ந்த மாணவர் உன்னி கிருஷ்ணன் நாயர், சென்ற 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த வளாகத்திலேயே எரிந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக,

– `ஐ.ஐ.டி-யில் சாதிப் பாகுபாடு தொடர்கிறது’ என்று புகார் எழுப்பிய உதவிப் பேராசிரியர் விபின், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது,

– 2019 நவம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த இதே ஐ.ஐ.டி-யின் மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணம் என ஐ.ஐ.டியைச் சூழ்ந்துள்ள சர்ச்சைகள் நிறைய.

இத்தகைய சூழலில்தான், கார்த்தியின் ஆர்.டி.ஐ தகவல்கள் அதிர்ச்சி கூட்டுகின்றன.

ஐ.ஐ.டி… பலருக்கும் கனவு. ஆனால், ஆதிக்க சக்திகளால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுவரும் சமூகத்து மாணவர்களில் பலருக்கும் அது கனவாகவே கலைந்து விடுவதுதான் தொடர் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், போட்டி போட்டுப் படித்து ஒரு வழியாக உள்ளே நுழைந்துவிட்டாலும், இதுபோன்ற உயர் கல்வி நிறுனவங்களில் முழுமையாகப் படித்து பட்டம்பெற்று வெளியேறுவதற்குள் ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது என்பது வேதனையே!

“2019-20 கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பயின்ற 9,882 மாணவர்களில் 1,212 பட்டியலின மாணவர்களும், 526 பழங்குடியின மாணவர்களும் உள்ளனர். மொத்த எண்ணிக்கையில் பட்டியலின மாணவர்கள் 12 சதவிகிதமும், பழங்குடியின மாணவர்கள் 5 சதவிகிதமும் உள்ளனர். இதிலேயே 5.5% குறைவு. அதாவது, பட்டியலினத்தைப் பொறுத்தவரை மொத்தம் 22.5% மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5.5% குறைந்துள்ளது. போதுமான மாணவர்கள் சேரவில்லை என்று இதை அப்படியே விட்டுவிட முடியாது. போதுமான மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவான சூழல் ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இல்லை என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

படாதபாடு பட்டு சேர்ந்துவிட்டாலும், பாதியிலேயே படிப்பைத் தொடராமல் விட்டவர்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் சதவிகிதம் பொதுப்பிரிவினரைவிட அதிகம். 2015 -16 முதல் 2018-19 வரையான கல்வி ஆண்டுகளில் முதுநிலை படிப்பில் மொத்தம் 286 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இடை விலகியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த 219 மாணவர்கள் இடை நின்றுள்ளனர். அதில், பட்டியிலினத்தைச் சேர்ந்தவர்கள் 42 மாணவர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் 25 மாணவர்கள். இது மொத்த மாணவர்களில் 23%-க்கு மேலாக இருக்கிறது.

Education (Representational Image)

கடினமாக உள்ள பாடப்பிரிவுகள், குடும்ப பொருளாதாரச் சூழல், மாணவர்கள் பேராசிரியர்களுக்கிடையே இணக்கமான சூழல் இல்லாதது, சாதி, மதப் பாகுபாடு போன்றவற்றால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இடைவிலகுவதாகச் சொல்கிறார்கள். சாதாரணமாக அரசுப் பள்ளியில் மாணவர்கள் இடை நின்றாலே ஆசிரியர்கள் அவர்களைச் சந்தித்து, குடும்பத்தினரிடம் பேசி, அவர்களுக்கான உதவிகளைச் செய்து மீண்டும் பள்ளியில் சேர்க்கிறார்கள். பள்ளிக் கல்வித்துறை அந்தளவு மாணவர் நலனில் அக்கறை காட்டும்போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி-யில் இடைநிற்கும் மாணவர்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல், போனால் போகட்டும் என்ற மன நிலையிலேயே இருக்கிறார்கள்.

மாணவர்களின் நலனுக்காக MITR/SAATHI என்கிற திட்டம் மூலம் மனநல ஆலோசகர், மருத்துவ நிபுணர்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்குவது நடைமுறையில் உள்ளதாகவும், மூத்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்டு WELLNESS என்கிற கவுன்சலிங் ஏற்பாடுகள் கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், சென்னை ஐ.ஐ.டி-யில் இது செயல்படுவதில்லை” என்று வேதனை தெரிவித்த கார்த்தி, “ஆசிரியர்கள் நியமனங்களிலும் அநீதி இழைக்கப்படுகிறது” என்று கொந்தளித்தார்.

Karthik

“பேராசிரியர் நியமனங்களிலும் பட்டியலின, பழங்குடியினத்தவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளது.

2019-20 கல்வியாண்டு நிலவரப்படி மொத்தம் 596 பேராசிரியர்களில் (பேராசிரியர்கள்-270, இணைப் பேராசிரியர்கள்-122, உதவிப் பேராசிரியர்கள் -123), பட்டியலினப் பேராசிரியர்கள் 15 பேர், பழங்குடியினர் 2 பேர் மட்டுமே இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இது மொத்த ஆசிரியப் பணியிடங்களில் வெறும் 3% மட்டுமே. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு இங்கு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதற்கான சாட்சிதான் இது.

சென்னை மட்டுமல்ல… ஹைதராபாத், டெல்லி, கரக்பூர் ஆகிய ஐ.ஐ.டி-களிலும் ஆர்.டி.ஐ-யில் பெற்ற தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. குறிப்பாக சென்னை, டெல்லி, ஹைதராபாத், கரக்பூர் உள்ளிட்ட நான்கு ஐ.ஐ.டி-களில் மொத்தம் 2,398 பேராசிரியர்களில் வெறும் 49 தலித் மற்றும் 10 பழங்குடியினர் பேராசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

டெல்லியில் 615 பேராசிரியர்களில் 18 பேர்,

ஹைதராபாத்தில் 484 பேராசிரியர்களில் 8 பேர்,

கரக்பூர் ஐ.ஐ.டி-யில் 701 பேராசிரியர்களில் வெறும் 8 பேர் என…

2,398 பேராசிரியர்களில் தலித் மற்றும் பழங்குடியினர் வெறும் 59 பேர் (2.4 %) மட்டுமே. நாடெங்கிலும் ஐ.ஐ.டி-களில் எந்த அளவுக்கு எஸ்.சி மற்றும் எஸ்.டி பேராசிரியர்கள் நியமனங்களில் சாதிய பாகுபாடு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மேற்கண்ட புள்ளிவிவரங்கள் சாம்பிள்தான்.

ஆக, சென்னை உட்பட மற்ற ஐ.ஐ.டி-களிலும் பாகுபாடு காட்டுவது உண்மை என்பதுதான் அவர்கள் ஆர்.டி.ஐ மூலமாகக் கொடுத்திருக்கும் தகவல்களிலிருந்து நிரூபணம் ஆகிறது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பாதுகாப்புகளை மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இதன் மூலமாகத்தான் இதுபோன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க முடியும்” என்றார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக நம்மிடம் பேசிய உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி, “மாணவர்களுக்கு கவுன்சலிங் இரண்டாவதுதான். ஐ.ஐ.டி-யில் உச்சாணிக் கொம்பில் இருந்துகொண்டு இறங்க மறுத்து, மாணவர்களுடன் ஒட்டாத ஆசிரியர்களுக்குத்தான் முதலில் கவுன்சலிங் கொடுக்க வேண்டும். மிகச் சிறந்த ஆசிரியர்களும் அங்கு உண்டு, அவர்கள் அரிதாக இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்னையே. சிறப்பான அந்த ஆசிரியர்களால் எல்லா மாணவர்களுக்கும் வழிகாட்ட முடியாது.

கிராமப்புற மாணவர்களும், எஸ்சி/எஸ்.டி மாணவர்களும் முதல் தலைமுறையாக ஐ.ஐ.டி-க்குள் நுழையும்போது அங்குள்ள சிலரின் நடவடிக்கைகளால் பல சங்கடங்களை சந்திக்கிறார்கள். இதுபோன்ற மாணவர்களைத் தட்டிக்கொடுத்து நண்பனைப் போல் ஆசிரியர்கள் நடத்த வேண்டும். ஆசிரியரின் ஆதரவு கிடைக்காத மாணவன், படிப்பில் ஆர்வமில்லாமல் டிராப் அவுட் ஆகிறான். இதுவே, தற்கொலை போன்ற கொடுமையான சம்பவங்கள் நடக்கக் காரணமாக அமைந்துவிடுகிறது.

ஒரு காலத்தில் அந்தஸ்தானவர்கள் மட்டுமே வேலை செய்யும், படிக்கும் கல்வி நிறுவனமாக அடையாளப்படுத்தி, அமெரிக்க வேலைக்குச் செல்லும் கேட்வே என்பதாகத்தான் ஐ.ஐ.டி இருந்தது. கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் கொடுத்த அழுத்தத்தால்தான் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இன மாணவர்களும் சேர்ந்து படிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், இது போதாது… முழுமையாக மாற்றம் ஏற்பட வேண்டும்.

Education (Representational Image)

நான் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில் இதுபோன்ற மாணவர்களை சகஜமாக்க `மென்டர் சிஸ்டம்’ கொண்டு வந்தேன். ஒவ்வோர் ஆசிரியரும் 5 மாணவர்களை வழிநடத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம். அதுமட்டுமல்லாமல், வாரம்தோறும் மனநல மருத்துவர்களை வைத்து ஆலோசனை அளிப்போம். அதன் மூலம் இடை நிற்கிற, தற்கொலை எண்ணம் கொண்ட பலர் மனம் மாறி நன்றாகப் படித்தார்கள். இதுபோன்று, ஐ.ஐ.டி ஆசிரியர்களும் இன்னொரு பெற்றோராய் மாறி மாணவர்களை வழி நடத்தினால்தான் முழுமையான மாற்றம் வரும்‘’ என்றார் எதிர்பார்ப்புடன்.

அதிக மாணவர்கள் தற்கொலை… சென்னை ஐ.ஐ.டி-யில்!

நாட்டிலேயே தரமான கல்வி வழங்குவதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் 8 ஐ.ஐ.டி-களில் நடந்துள்ள மரணங்களைப் பற்றிய தரவுகளை ஆய்வு செய்தபோது, 2010 முதல் 2019 வரை 56 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில் அதிகமாக சென்னை ஐ.ஐ.டி-யில் 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த ஆர்.டி.ஐ விவரங்கள் மற்றும் இதர பிரச்னைகள் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி தரப்பு விளக்கத்தை அறிய அவர்களை மெயில் மூலம் தொடர்புகொண்டோம். பதில் இல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.