இஸ்லாமாபாத்: சிந்து நநி நீர் ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சு, பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று துவங்கியது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக, கடந்த 1960ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய, இரு நாட்டிலும், சிந்து நதி நீர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இரு நாட்டின் ஆணையங்களும், ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும்.
இந்த சந்திப்பு, கடந்த ஆண்டு மார்ச்சில், டில்லியில் நடந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பேச்சு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று துவங்கியது.
இதில், இந்தியாவின் சிந்து நதி நீர் ஆணைய கமிஷனர், பி.கே.சக்சேனா தலைமையில் 10 பேர் அடங்கிய இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளது. இவர்கள், வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றனர்.
பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டின் சிந்து நதி நீர் ஆணைய கமிஷனர், சையது முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.
இந்தப் பேச்சு, நாளை வரை நடக்கிறது. ஒப்பந்தம் தொடர்பான பல முக்கிய பிரச்னைகள் பற்றி, இன்றும் நாளையும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.