ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்பு  

2022 பெப்ரவரி 28ஆந் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமைச்சொத்து அமைப்பு ஆகியவற்றுடன் 2022 பெப்ரவரி 28ஆந் திகதி உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா. மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு அவர்களுடனான சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், மற்றும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் அரசாங்கத்தின் விரிவான முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கையின் முயற்சிகளைப் புரிந்துகொண்டு, அங்கீகரிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பரோனஸ் பெட்ரிசியா ஸ்கொட்லாந்துடனான சந்திப்பில், பொருளாதார முன்னணி, சுற்றுலா மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி போன்ற வாய்ப்புக்கள் உட்பட பொதுநலவாய நாடுகளுடனான இலங்கையின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார். பொதுநலவாய செயலாளர் நாயகம் நீலப் பொருளாதாரத்தில் இலங்கையின் முக்கிய பங்கைப் பாராட்டியதுடன், இந்தப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஈடுபாட்டைக் கோரினார்.

அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் ஜெனிவாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தரக் கண்காணிப்பாளர் நசிமா பாக்லியுடன் ஆக்கபூர்வமான சந்திப்பில் ஈடுபட்டதுடன், அதன் போது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களுடனான இலங்கையின் நீண்டகால நட்புறவு, இலங்கை சமூகத்தின் பல்லின மற்றும் பல மத இயல்புகள், அதன் முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் அவர்களது நலன்களை முன்னேற்றுவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

உலக புலமைச்சொத்து அமைப்பின் பணிப்பாளர் நாயகம் திரு. டேரன் டாங் அவர்களுடனும் ஆக்கபூர்வமான சந்திப்பில் ஈடுபட்ட அமைச்சர், கொள்கை அபிவிருத்தி, டிஜிட்டல் மயமாக்கல், புவியியல் குறியீடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஐ.பீ. யைப் பயன்படுத்துவதில் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் புலமைச்சொத்துக்களில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்த யோசனைகளை பரிமாறிக் கொண்டார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திரு. நெரின் புள்ளே மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சந்திரபிரேம ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மார்ச் 02

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.