மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் மேயர் வேட்பாளர் தேர்வு நடத்தும் முதல்வர் ஸ்டாலினின் திடீர் முடிவால் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி மேயர் வேட்பாளரை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக முடிவு செய்வார் என்றும், மண்டலத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைப் பட்டியலில் இல்லாதவர்களைக் கூட மேயர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கலாம் என்ற பரபரப்பு, திமுகவில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அனைத்து மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளையும் திமுகவே கைப்பற்றும்நிலை ஏற்பட்டுள்ளது. அதில், சில மாநகராட்சிகளின் துணை மேயர், மண்டலத் தலைவர் பதவிகளை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் கேட்கின்றன. அவர்களுக்கு துணை மேயர், மண்டலத் தலைவர்கள் பதவி வழங்குவது பற்றி தற்போது வரை ஒரு முடிவுக்கு ஸ்டாலின் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், மேயர் வேட்பாளரை தேர்வு செய்ய அந்தந்த மாநகராட்சிகளுக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களிடம் மேயர் வேட்பாளர் பரிந்துரைப் பட்டியல் கேட்கப்பட்டது. முன்பு இதுபோல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் பரிந்துரைப் பட்டியல் கேட்கப்பட்டு. அதில் இருந்து ஒருவர்தான் வேட்பாளராக தேர்வு செய்வது வழக்கமாக திமுகவில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதுபோல் தற்போதும் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரைப் பட்டியல் கேட்கப்பட்டதால், அந்தப் பட்டியலில் இருந்துதான் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் நினைத்திருந்தனர். தற்போது திடீர் திருப்பமாக மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத கவுன்சிலர்களைக் கூட மேயராக்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இளம் கவுன்சிலர்களுக்கு மேயர் வாய்ப்பு: இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ”மேயர் வேட்பாளரை, பெரும் பொருளாதார பலம், அவர்கள் குடும்ப அரசியல் பின்னணி அடிப்படையில் தேர்வு செய்யாமல் இதுவரை பெரிய அறிமுகம் இல்லாத உளவுத்துறை போலீஸார் விசாரிப்பின்படி படித்த, குற்றப் பின்னணி இல்லாத இளம் கவுன்சிலர்களைக் கூட மேயராக்க ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், ஒரு சில மாநகராட்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத கவுன்சிலர்கள் பெயரையும் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் சேர்த்து அவர்களை உளவுத்துறை போலீஸார் மூலம் விசாரிக்கும் பணி கடந்த 2 நாளாக சத்தமில்லாமல் நடக்கிறது.
மாநகராட்சி மண்டலத் தலைவர்களை மட்டும் தேர்வு செய்யும் அதிகாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கிவிட்டு மேயர் வேட்பாளரை ஸ்டாலினே நேரடியாக தேர்வு செய்ய உள்ளதாக கட்சி மேலிடம் கூறியிருக்கிறது. அதனால், ஜெயலலிதா பாணியில் திமுகவிலும் வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் யாரை வேண்டுமென்றாலும் ஸ்டாலின் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கலாம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.