உக்ரைன் மீது கடந்த 6 நாட்களாக ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து கைப்பற்ற முயற்சித்து வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கீவ் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை, உக்ரைன் விவசாயி ஒருவர் தனது டிராக்டர் மூலம் திருடிச் சென்றுவிட்டார்.
இந்த வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதியும், பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி.யுமான ஜானி மெர்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்துச் செல்ல அதன் பின்னால் ராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் கூறும்போது, “ரஷ்யாசிறந்த நிபுணர் இல்லை என்று இதன் மூலம் தெரிகிறது. உக்ரைன்மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை. உக்ரைன் நாட்டு டிராக்டர் இன்று ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தைத் திருடியுள்ளது” என்றார்.
இந்நிலையில் இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தூதர் ஷெர்பா கூறும்போது, “உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகவும் கடினமானவர்கள்” என்றார்.