திருச்சி சட்டப்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற அரசாணை வெளியீடு

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில், தேசிய அளவிலான மிகச் சிறந்த சட்டக்கல்வி வழங்கும் பொருட்டு, 2012-ம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மாநிலச் சட்டம் மூலம் திருச்சியில் தோற்றுவிக்கப்பட்டு 2013-2014-ம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் தற்சமயம் 521 மாணவர்கள் சட்டக் கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையானது பொது சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுகிறது.

இந்த பல்கலைக்கழகத்திற்கு என ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த இடங்களுள் 45 சதவீத இடங்கள் தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களாலும், 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மற்றும் 5 சதவீத இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழும் பூர்த்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கான (45 சதவீத) இடங்களைப் பொறுத்தமட்டில், அவை தமிழ்நாடு அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கையினைப் பின்பற்றி பூர்த்தி செய்யப்படுகிறது. 50 சதவீத அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பொறுத்தமட்டில் 15 சதவீத இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் 7.5 சதவீத இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் மீதமுள்ள 77.5 சதவீத இடங்கள் பொது முறைப் போட்டியிலும் பூர்த்தி செய்யப்படுகிறது.

இருப்பினும், அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான இடங்களுள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கென தனியே இடஒதுக்கீடு ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே மேற்சொன்ன சூழலை கவனமுடன் கருத்தில் கொண்டு, விரிவான பரிசீலனைக்குப் பின் தமிழ் நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்களையும், தமிழ் நாட்டினை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்டு வரும் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையான 69 சதவீதம் (பொது பிரிவு 31 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம் பட்டியலினத்தவர் 18 சதவீதம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீதம்)-ஐ போன்றே பின்பற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவின் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி சமூக நீதியை நிலை நாட்டுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களுள் அவர்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீத இடங் களை உறுதி செய்து நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக சட்டசபை 18-ந்தேதி தொடங்க வாய்ப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.