உக்ரைனைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அண்டை நாடான ஹங்கேரிக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கணவன், சகோதரன், தந்தை என ஆண்களை மட்டும் வீட்டில் விட்டு விட்டு பெண்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
உக்ரைனில் போர்ப் பதட்டம் சற்றும் தணியவில்லை. காரணம், போரை நிறுத்தும் எண்ணத்தில் ரஷ்யா இல்லை. தொடர்ந்து தாக்கி வருகிறது. தலைநகர் கீவ் நகரை கைப்பற்றும் முயற்சியை ரஷ்யா சற்று தாமதித்து வருகிறது. இருப்பினும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போர் நிற்பதாக இல்லை. தொடர்ந்து வேகம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டு பெண்களும், குழந்தைகளும் தங்களது வீட்டு ஆண்களை விட்டு விட்டு அண்டை நாடுகளுக்குக் கிளம்பிச் சென்று வருகின்றனர். அருகில் உள்ள ஹங்கேரிக்கும் பெண்கள் பலர் குழந்தைகளுடன் சென்றவண்ணம் உள்ளனர்.
ஹங்கேரியில் உள்ள பெரிக்சுரானி நகரில் உள்ள தொடக்கப் பள்ளியின் விளையாட்டு அரங்கம் தற்காலிக அகதிகள் புகலிடமாக மாறியுள்ளது. உக்ரைனிலிருந்து வரும் குழந்தைகளுக்கு அந்த இடத்தில் தங்க இடம் கொடுத்துள்ளனர். அவர்கள் விளையாடுவதற்கு உள்ளூர் மக்கள் பல்வேறு விளையாட்டுப் பொருட்களையும் வழங்கியுள்ளனர். குழந்தைகள் சவுகரியமாக விளையாடுவதற்கும், படுத்துத் தூங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கீவ் நகரில் “வெயிட்டிங் மோட்”.. வட மேற்கில் அதிரடி.. தெற்கே தெறி வேகம்.. திணறும் உக்ரைன்
குட்டிக் குழந்தைகள் அங்கு துள்ளிக் குதித்து விளையாடி மகிழ்கின்றன. சற்று வளர்ந்த குழந்தைகள் புதிர் விளையாட்டு உள்ளிட்டவற்றை விளையாடுகின்றன. கைக்குழந்தைகள் தங்களது தாயாரின் தோளில் நிம்மதியாக தூங்குகின்றன. தற்காலிகமாக உக்ரைனை மறந்து விட்டு அங்கு குழந்தைகளும், அவர்களின் தாயார்களும் நிம்மதியாக உள்ளனர்.
அந்தப் பள்ளி முழுவதும் பல்வேறு பகுதிகளில் உக்ரைனிலிருந்து வந்துள்ளோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை உக்ரைனிலிருந்து ஹங்கேரிக்கு 84,571 பேர் இடம் பெயர்ந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு எல்லைப்புற நகரங்களில் அவர்களை அதிகாரிகள் தங்க வைத்து வருகின்றனர். உக்ரைனிலிருந்து வரும் பெண்கள் பலரும் தங்களது ஆண்களை விட்டு விட்டுத்தான் வந்துள்ளனர். காரணம், உக்ரைன் ராணுவம், ஆண்களை வெளியேற விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.
அங்கே “டமால் டுமீல்”.. இங்கே “டும் டும் டும்”.. உக்ரைன் பெண்ணை மணந்த ஹைதராபாத் பையன்!
ஆனாலும் கூட ஜூலியா என்ற பெண் தனது கணவரை சிரமப்பட்டு உள்ளே கூட்டி வந்து விட்டார். கூடவே அவர்கள் வளர்க்கும் குட்டிப் பூனையையும் கூட்டி வந்துள்ளார். ஜூலியாவின் கணவர் பெலாரஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர் ஆவார். விரைவில் எங்களது நாட்டில் அமைதி திரும்பும், மகிழ்ச்சியான, சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் மீண்டும் வாழ்வோம் என்று அங்குள்ள பெண்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போது போர் போகும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் பல நாட்களுக்கு அங்கு போர்ப்பதட்டம் நீங்க வாய்ப்பில்லை என்றே பலரும் சொல்கிறார்கள்.