புது தில்லி: புதன்கிழமை (மார்ச் 2) வெளியிடப்பட்ட அவசர ஆலோசனையில், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், உக்ரைன் நகரத்தில் உள்ள மோசமான நிலைமை காரணமாக கார்கிவ்விலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்தியர்களை கேட்டுக் கொண்டது.
இன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆலோசனையில், இந்தியத் தூதரகம், “இங்குள்ள இந்தியர்கள், பாதுகாப்பு கருதி கார்கிவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இங்கிருந்து பெசோச்சின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்ல வேண்டும். இந்த பாதுகாப்பு புகலிடங்களை உக்ரேனிய நேரத்தில் மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய வேண்டும். பேருந்துகள் அல்லது பிற வாகனங்களை அணுக முடியாத மாணவர்கள் நடந்தாவது பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளது.
கிழக்கு உக்ரைன் நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியாவின் இந்த ஆலோசனை வந்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, கார்கிவ் நகரில் உள்ள நகர சபை கட்டிடத்தின் மீது ரஷ்யப் படைகள் புதன்கிழமை ஒரு க்ரூஸ் ஏவுகணையை வீசியதாக பிராந்தியத்தின் துணை ஆளுநர் ரோமன் செமெனுக்கா தெரிவித்தார்.
மேலும் படிக்க | உக்ரைன் எல்லையை கடக்க இந்திய தேசியக்கொடி உதவியது: பாகிஸ்தான் மாணவர்கள் உருக்கம்
கடந்த இரண்டு நாட்களாக கார்கிவ் நகரில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும், செவ்வாயன்று 21 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் முன்பு கார்கிவ் நகரில் நடந்த ஷெல் தாக்குதலில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
கார்கிவ் நகரில் கொல்லப்பட்ட 21 வயதான இந்திய மருத்துவ மாணவரின் இறப்பு குறித்து ரஷ்யா விசாரிக்கும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் புதன்கிழமை தெரிவித்தார்.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சலகேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா ஞானகவுடர், கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வந்தார். அவர் செவ்வாயன்று கார்கிவில் நடந்த கடுமையான ஷெல் தாக்குதலில் இறந்தார்.
இதற்கிடையில், ஆபரேஷன் கங்கா மீட்பு நடவடிக்கையின் கீழ், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 20,000 இந்தியர்களில் 6,000 பேர் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் இன்று தெரிவித்தார்.
“சுமார் 20,000 மாணவர்கள்/குடிமக்கள் உக்ரைனில் சிக்கித் தவித்தனர். அவர்களில் 4,000 பேர் பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டனர். கூடுதலாக 2,000 இந்திய மாணவர்கள் செவ்வாய்கிழமைக்குள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். மேலும் அங்கு சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ரஷிய தாக்குதலில் இந்திய மாணவர் உயிர் இழந்தது எப்படி…? முழு விவரம்