வாட்டிகன் சிட்டி:”வாட்டிகனில் வாழும் தம்பதியினர், செல்லப் பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டு, நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்,” என, போப் பிரான்சிஸ் அறிவுறுத்தி உள்ளார்.
இத்தாலியில் இருக்கும் தன்னாட்சி உடைய நாடான வாட்டிகனில், மகப்பேறு விடுப்பு கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, வாட்டிகன் சிட்டியில் நேற்று முன்தினம் போப் பிரான்சிஸ் வெளியிட்டார். அதன் விபரம்:வாட்டிகனில், பெண்களுக்கு உள்ள மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களாக உள்ளது. இந்த ஆறு மாதங்களுக்கும் முழு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது மாற்றப்பட்ட கொள்கையின்படி, இந்த விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திக் கொள்ளலாம். ஆனால், கடைசி ஆறு மாதங்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படும். இதேபோல், ஆண்களுக்கும், மூன்று நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். அதற்கு முழு ஊதியம் வழங்கப்படும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும், இந்த சலுகை அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து போப் பிரான்சிஸ் கூறுகையில், ”குழந்தைகளின் இடத்தை நாய்களும், பூனைகளும் பிடித்துள்ளன. வாட்டிகனில் வாழும் தம்பதியினர், செல்லப் பிராணிகளை வளர்ப்பதை விட்டுவிட்டு, நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
Advertisement