தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பத்ர தீப விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் முழுவதும் 10 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டு விளக்கொளியில் கோவில் ஜொலித்தது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பத்ர தீப திருவிழா கடந்த 28ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தினமும் காலை மாலை சுவாமி சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான இன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜைகளும், அதனை தொடர்ந்து கோவில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. பத்ர தீப விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முழுவதும் பத்தாயிரம் தீபம் ஏற்றப்பட்டு கோவில் உள்ள விளக்கொளியில் ஜொலித்தது. பத்ர தீபம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM