படிக்கப் போன இடத்தில், போரில் சிக்கிக் கொண்ட
இந்திய மாணவர்கள்
உக்ரைனிலிருந்து மீண்டு வந்துள்ள கதையைக் கேட்டால் கல் நெஞ்சும் கரைந்து போகும். அத்தனை சிரமங்களை ஒவ்வொரு மாணவரும் சந்தித்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் இப்போது போராக வெடித்துள்ளது. ரஷ்யத் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது உக்ரைன். பல நகரங்களில் ரஷ்யத் தாக்குதல் அதிகரித்துள்ளது. கீவ் நகரைப் பிடிக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது உக்ரைன்.
இந்த நிலையில் அங்கு படிப்பதற்காக போயிருந்த இந்திய மாணவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் மீண்டு தாயகம் திரும்பிக் கொண்டுள்ளனர். உக்ரைனுக்குள் போய் மாணவர்களை மீட்க முடியாத நிலை இருப்பதால், உக்ரைனிலிருந்து அக்கம் பக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் வருகின்றனர். அங்கு வைத்து விமானம் மூலம் தாயகத்திற்குக் கொண்டு வருகிறது இந்திய அரசு.
ஆனால் மாணவர்கள் அங்கிருந்து மீண்டு வருவது அத்தனை சாதாரணமானதாக இல்லை. கடும் சிரமத்திற்கு மத்தியில்தான் ஒவ்வொரு மாணவரும், உக்ரைனிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதுபோல மீட்கப்பட்டு டெல்லி வந்து சேர்ந்த மாணவர் சுபான்ஷு அங்கு நடக்கும் நிலவரம் குறித்து விவரித்துள்ளார். மீண்டு வந்த மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அருகிலேயே தாய் நின்றிருக்க மகன் சுபான்ஷு நடந்ததை விவரிக்கிறார்..
நாங்கள் வின்னிட்சியா என்ற நகரிலிருந்து எல்லைக்கு வந்தோம். அந்தப் பயணம் மிகக் கொடுமையானது. எங்களது காண்டிராக்டர்கள் பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். ஆனால் இடையில் நாங்கள் 12 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. நடப்பது கூட பிரச்சினை இல்லை. ஆனால் ரொமேனியா நாட்டு எல்லைக்கு வருவதுதான் மிகக் கடினமாக இருந்தது. மிக மிக சிரமப்பட்டுத்தான் எல்லையைத் தாண்ட முடிந்தது.
மாணவர்கள் பலரும் கதறி அழுதனர். எங்களை எப்படியாவது எல்லைத் தாண்டிச் செல்ல விடுங்கள் என்று கதறி அழுதோம். பலர் மயங்கி விழுந்தனர். சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு எந்த துன்புறுத்தலும் நேரவில்லை. ஆனால் உக்ரைனியப் படையினர் சிலரைத் தாக்கியதைப் பார்த்தோம்.
மாணவர்களை துப்பாக்கியின் பின்பகுதியால் குத்தினர். கீழே தள்ளி உதைத்தனர். நிலைமை மோசமாக இருந்தது. எங்களைப் பற்றிக் கவலைப்படவே இல்லை அவர்கள். எல்லை கதவுகள் திறக்கப்பட்டபோது முதலில் உக்ரைன் நாட்டவரைத்தான் அனுப்பினர். அதன் பின்னர்தான் எங்களை அனுமதித்தனர். எல்லை தாண்டி ரொமேனியாவுக்குள் வந்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களைக நன்றாகப் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.
தண்ணீர் உணவு எல்லாம் கிடைத்தது. மாணவர்கள் தங்குவதற்கு ஷெல்டர்கள் அமைத்துள்ளனர். அவை 5 ஸ்டார் ஹோட்டல் வசதிகளுடன் கூடியதாக உள்ளது. இருப்பினும் ரொமானிய எல்லையில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது என்றார் சுபான்ஷு. வின்னிட்சியா என்ற நகரம், கீவ் நகரிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் கிட்டத்தட்ட 16,000 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பலர் பங்கர்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ஷெல்டர்களில் தங்கியுள்ளனர். ரஷ்ய தாக்குதல் உக்கிரமடைந்து வருவதால் அவர்கள் அதிலிருந்து தப்ப தவிக்கின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 10,000 இந்திய மாணவர்கள் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.